அழுகிய மனம்

காவிரியும் கங்கையும் கன்னமதில் கொண்டாளுக்கு,

காவலனாய் காத்திருப்போன் கோர்த்திருக்கும் கவிதையிது…

|

ஒத்த ஏற்றம் பெற்றாற்போல் இமைகள் விழிமூட மறக்கையில்
ஒற்றை சுருதி சிந்து தாலாட்டாய் நின் இதயத்துடிப்பு…
கருப்பை காரிருளில் தடம் மாறி தவழ்கையில்
கட்டியிழு காதலனாய் தினம் காக்கும் தொப்புள் கொடி…
|
மன்மத நிறங்கொண்டான் நின் மார்பினில் முகம் பதிக்க
மலராத மொட்டுக்களாய் உதிரும் முனகல்கள் மெட்டுக்களாய் எனக்கும்…
நின் மெல்லிடைதனில் புரண்டிடும் உன்னவனுக்கு
நிறைவாய் நானும் வாழ்த்துரைத்ததாய் நினைவலை…
|
உலகத்து அழகி முதல் விண்ணகத்து ரம்பை வரை
உன் மடியில் தலைசாய்த்து நின் எழில் அவன் புகழ…
பாசமாய் நானும் பலமாய் உதைத்தேன்
பாவை உன் முகம் பார்க்கும் நன் நாள் எதிர்பார்த்தே…
|
இதழ் இதழாள் இமைக்கும் அழகை நான் இமைக்காது இரசிக்க
இங்கிதமாக கருப்பைக்கதவை தட்டினேன் நானும் சங்கீதமாக…
வாழ்வெல்லாம் வலி வடுவின்றி நீ வாழ நான் வேண்டினும்

வானவில் உன்னை விழி பார்க்க பிரசவ வலி பிறக்க வேண்டுமென்றேன்…

|

ஆனால் பிரசவ வலி உணராது பிரசவமே இல்லாது கயல்விழியாள் காண
ஆனந்தம் ஆழ்மனதில் உனக்கு வலியேதும் இல்லாததை எண்ணியே…
எனினும் வார்த்தைகள் மௌனிக்கையில் வருடல்கள் தாலாட்டாகிட

எண்ணியதெல்லாம் கருகிப்போனதால் பிஞ்சு எனக்கு துக்கம் துளியளவில்…

|

தந்தையாய் எனக்கு இருப்பவனுக்கு தாரமாய் நீ இல்லாதது
தரணியில் சிதைந்த பின்பே தெரிந்தது தாமதாய் எனக்கும்…
பெற்றாரும் தூற்றுவார் உற்றாரும் தூசிப்பாரென தெரிந்த பின்னும்

பெரு மனங்கொண்டு கருவறை நிழலில் உயிர்கொடுத்த காரணமேதோ?

|
அன்னையென உன்னை அரவணைக்கும் எண்ணமெல்லாம்
அடியேனுக்கு எட்டாக்கனியெனினும் அன்பிற்கு பஞ்சமில்லை கொஞ்சமும்…
காவலாய் காத்திருப்பேன் நானும் நினைவிலும் நனவிலும்

காவியம் நீ காலமெல்லாம் நீடூழி வாழவேண்டுமென்றெதிர்பார்த்தே…

|
கருவறையே கல்லறையான அழகிய மலர் நானும்
கண்ணீரால் கரைகிறேன் உன் அழுகிய மனங்கண்டு
Written By:

Arulpracasiny George
(6th Place – Creative Content)
WORDSVILLE’20

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments