சர்வதேச எழுத்தறிவு தினம்

 

சர்வதேச எழுத்தறிவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

.நா. கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனம் (யுனெஸ்கோ) 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் உருவாகும் அரசியல், சமூக, மற்றும் பொருளாதார சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை முழுமையாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. எழுத்தறிவின்மையை அகற்றும் நோக்கில், செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாள் என யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு அறிவித்தது. 1967 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று சர்வதேச எழுத்தறிவு நாள் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக, எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்கவும், எழுதவும், பேசவும், கேட்டு புரிந்து கொள்ளும் திறனை குறிக்கும். இன்று, எழுத்தறிவு என்பது பல விதமான தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி, எழுத்தறிவுள்ள சமூகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படக்கூடிய திறனைப் பொருள்படுத்துகிறது. இதிலே கணக்குப்பாடுகளும், கணினி பயன்பாடுகளும் அடங்குவதை நினைவில் கொள்ள வேண்டும். எழுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான நிலையைப் பெறுகிறது. எழுத்தறிவு இல்லாத மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பங்களிப்புகளை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகிறார்கள். அதனை தவிர, எழுத்தறிவு என்பது தனிநபர் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாகிறது.

எழுத்தறிவை மேம்படுத்தும் வழிகள்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களிடையே எழுத்தறிவை மேம்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இணையதளம் போன்றவற்றின் பயனினை கொண்டு, எழுத்தறிவு பற்றிய கல்விப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

கல்வி நிலையங்கள் மற்றும் நூலகங்களின் வளர்ச்சி மூலம் அனைத்து தரப்பினருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும். இலங்கை ஒரு உயர்ந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட நாடாக திகழ்கிறது. இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 90%க்குப் மேலாக உள்ளது. இது தெற்காசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறந்த முன்னேற்றமாக கருதப்படுகிறது. இலங்கையில் கல்வியறிவின் உயர்ந்த நிலைக்கு பின் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, அரசின் வலுவான கல்விக் கொள்கைகளும், இலவச கல்வி வழங்கும் திட்டங்களும் ஆகும். இலங்கையின் அரசாங்கம் 1940களில் இலவசக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதன் பயனாக நாட்டின் மக்களிடையே எழுத்தறிவு அதிகரித்துள்ளது. சர்வதேச எழுத்தறிவு நாள் என்னும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் இந்நாள், நம் வாழ்வில் எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்துகிறது. அனைவருக்கும் எழுத்தறிவு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நாள், நம் சமூகத்தில் மேலும் பலருக்கு எழுத்தறிவை வழங்க உற்சாகமூட்டுகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுத்தறிவை மேம்படுத்தி, ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Written By:

 

 

 

 

Rtr. Shimra Shamil
(Blog Team Member 2024-25)

Edited By: –

 

 

 

 

Rtr. Naduni Premathilaka
(Blog Team Member 2024-25)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments