சர்வதேச சுங்கதினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை உலக சுங்க அமைப்பால் (World Customs Organization – WCO) முன்னெடுத்து நடாத்தப்படுகின்றது.
உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதிலும், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதிலும் சுங்கத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுங்கத்துறையின் பிரதான நோக்கம், சட்டப்பூர்வமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை எளிதாக்குவது ஆகும். அதே நேரத்தில், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல், போலி பொருட்கள் போன்ற குற்றங்களை தடுக்க சுங்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்படுகின்றனர். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பும், சமூக நலனும் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், சுங்கத்துறை அரசுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக செயல்படுகிறது.
சுங்க வரி மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேசிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை உறுதிப்படுகிறது.

சர்வதேச சுங்க தினம், சுங்க அதிகாரிகளின் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை மதிக்கும் நாளாகும். உலகளாவிய வர்த்தகத்தில் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த அவர்கள் ஆற்றும் சேவைகளை நினைவுகூரும் நாளாக இந்த நாள் விளங்குகிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு குறித்த கருத்து தேர்ந்தெடுக்கபட்டு இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சுங்கத் துறையின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது.
சுங்கத் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அபாயகரமான கழிவுகள், அரிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுத்து, இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சுங்க அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதன் மூலம் எதிர்கால தலைமுறைகளுக்கான இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

Written By: –

Rtr. Ilaxshana Rajeshkanth
(Junior Blog Team Member 2025-26)
Design By: –

Rtr. Munshifa Waseer
( Junior Blog Team Member 2025-26)

