சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை

சுற்றுச்சூழல் என்பது மனிதன், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தும் இணைந்து வாழும் உலகமாகும். இன்றைய நவீன உலகில், மனிதர்களாகிய நாம்  எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும். நாம் வாழும் பூமி நமக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்குகிறது. ஆனால், மனிதனின் பேராசையாலும், திட்டமிடப்படாத பயன்பாட்டாலும் இந்த வளங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

தற்போதைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் அதிகரித்துள்ளன. இதனால் காற்று மாசு, நீர் மாசு, பிளாஸ்டிக் கழிவுகள்,  காடழிப்பு போன்ற பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உலக வெப்பமயமாதல் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டதை எச்சரிக்கின்றன. எரிபொருள் எரிப்பு, தொழிற்சாலை வெளியீடுகள் மற்றும் வாகன புகை போன்றவை பிரதானமான காரணங்களாகின்றன.

நிலைத்தன்மை என்பது இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் போது எதிர்கால தலைமுறைகளின் தேவைகளை சமரசம் செய்யாமல் இருப்பதை குறிக்கிறது. இது மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது.  அவையாவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு என்பவையாகும்.

நிலைத்த வளர்ச்சி குறித்து உலக நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. உதாரணமாக,  ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, மரநடுகை, கழிவுகளை மறுசுழற்சி செய்தல் போன்ற செயல்கள் நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவுகின்றன.

நாம் தினசரி வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய சில எளிய நடவடிக்கைகளாக  பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தல், நீரை வீணாக்காமல் பாதுகாத்தல், மரங்கள் வளர்த்தல், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துதல் மற்றும்  சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் போன்ற இயற்கை சக்திகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். இயற்கையை மதித்து, வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி, நிலைத்த வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதே எதிர்கால தலைமுறைகளுக்கு நாம் தரும் சிறந்த பரிசாகும். இயற்கை என்பது நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல, நம் குழந்தைகளுக்கு வாங்கிய கடன். “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்பது வெறும் முழக்கமாக மட்டும் இல்லாமல், நமது வாழ்வியல் முறையாக மாற வேண்டும். சிறிய மாற்றங்கள் ஒரு பெரிய நன்மையை உருவாக்கும்.

 

Written By: –

 

 

 

 

Rtr. Kishaalini Yohanathan
(Junior Blog Team Member 2025-26)

Design By: –

 

 

 

 

Rtr. Kawindra Wickramasinghe
(Junior Blog Team Member 2025-26)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top