நினைவில் துளிர்த்தவை

ட்ரீங்… ட்ரீங்… எனது அருகிலிருந்த அலாரம் ஒலித்தது. கூடவே “சில்ரன் கெட் அப்! கெட் அப்! 6 மணியாச்சு…….. குயிக் குயிக்……” எங்கள் மதரின் குரல். அலாரம் கூட அவ்வளவாக கேட்கவில்லை. ஆனால் மதரின் குரல் கணீரென கேட்க சட்டென்று எழுந்து விட்டேன். 

இங்கு இரவு 9 மணியானால் தூங்கி விட வேண்டும். காலையில் 6 மணிக்கெல்லாம் டான்னு எழுந்துவிட வேண்டும். இது இங்கிருக்கும் முக்கிய நடைமுறைகளில் ஒன்று. எழுந்திருந்த எல்லோரும் பாதி நித்திரையில் கட்டிலில் சோர்வாய் இருக்க மீண்டும் அதே குரல் “இன்னும் குளிக்க போகலயா?” “போய்ட்டோம் மதர்…” என எல்லோரும் ஒரே நேரத்தில் பாத்ரூம் நோக்கி ஓடினார்கள். ஆனால் நான் கொஞ்சம் சோகமாய் தான் இருந்தேன். காரணம் நான் அங்கு வந்து சேர்ந்து நான்கு நாட்கள் தான் ஆகியிருந்தன. அங்கு யாருடனும் பேச மாட்டேன். தனிமையில் சுற்றுவேன். காலையில் எழுத்து ஸ்கூல் போய் வந்து பிறகு இரவு கொஞ்ச நேரம் படித்து விட்டு தூங்கி விடுவேன். இடையில் மாலை நேரம் விளையாட கூட போக மாட்டேன். தனிமையில் இருக்க மட்டுமே விரும்பினேன். மதர்தான் அடிக்கடி கூப்பிட்டு ” இப்படி இருக்க வேண்டாம். சந்தோசமா எல்லோரோடயும் பழகு! ” என்று அன்பா புத்திமதி சொல்வார்கள். நானும் மதர் கூட மட்டும் தான் அவ்வப்போதாவது பேசுவேன்.

அன்றும் வழமை போல் குளித்து விட்டு வந்து யூனிபோர்ம் போட்டு, சிஸ்ட்டரை கொண்டு தலைவாரி, டை, சப்பாத்து எல்லாம் அணிந்து தயாராகி பாக் ஐ கொழுவிக்கொண்டு ஸ்கூல்க்கு கிளம்பினேன். போகும் வழியில் மதரின் அலுவலக வாசலில் ஒரு பையன் அழுது கொண்டிருந்தான். பார்க்க பாவமாய் இருந்தது. ஆனால் நான்கு நாட்களுக்கு முதல் என் நிலையும் அது தான் என எண்ணும் போது என்னை அறியாமலேயே சிரித்து கொண்டு ஸ்கூல் சென்றேன்.

ஸ்கூல் எல்லாம் முடிந்து மீண்டும் ஹொஸ்டல் வர அங்கு நான் காலையில் கண்ட அதே பையன் என் கட்டில் அருகே பக்கத்து கட்டிலில் அமர்ந்திருந்தான். காலையில் பார்த்தது போன்று அழுதபடியே இருந்தான். அவன் அருகே மதர் இருந்து அவனை தேற்றிக்கொண்டிருந்தார். நான் என் கட்டிலுக்கு சென்றேன். அப்போது மதர் “வாம்மா … ஷெரின்… இது ரவி, புதுசா வந்திருக்கான். இனிமே உங்ககூட தான் இவன் இருக்க போறான். இதுதான் இவன் கட்டில்” என்று சொல்லி அவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இரண்டு பேரையும் கை குலுக்க வைத்து – ” இனிமேல் நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்! ” என்று சொல்லி அவனை மீண்டும் தேற்றி, தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். இரவு நேரமானது…. நான் வழமை போல் என் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போதும் அவன் சோகமாய் கட்டிலில் படுத்திருந்தான். அங்கிருந்த யாருடனும் பேசவில்லை . இரவு 9 மணி ஆனது தூக்கமும் வரவே ஸ்கூல் பாக் ஐ தயார் செய்து விட்டு படுக்க ஆயத்தமானேன். அப்போது அவன் முகம் சலனமற்று கண்கள் திறந்த வண்ணம் எதையோ எண்ணியவனாய் படுத்திருந்தான். நான் அப்படியே கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன். நள்ளிரவு இருக்கும் எதோ முனகல் சத்தம். திடுக்கிட்டு கண் விழித்து பார்க்க முகம் எல்லாம் வேர்த்து நடுங்கியபடி “அம்மா… அம்மா…” என முனுமுனுத்துக் கொண்டிருந்தான் அவன்.

பயத்தில் நான் அவன் அருகே சென்று மெல்ல தட்டினேன். அவன் உடல் நெருப்பாய் சுட்டது. உடனே நான் அங்கே தூங்கி கொண்டிருந்த எங்களுக்கு பொறுப்பான சிஸ்ட்டரை பதற்றத்துடன் தட்டி எழுப்பி விஷயத்தை கூறினேன். அவர் விரைந்து வந்து தொட்டுப்பார்த்து, மடியில் படுத்தி, அவனின் வேர்த்த முகத்தை துடைத்து அவனை தேற்றினார். பின் காய்ச்சல் அதிகம் இருப்பதை உணர்ந்து மருந்து கொடுத்தார். பிறகு இன்னொரு சிஸ்டரை வரவழைத்து சுடுநீர் கொண்டு வரச்சொல்லி நெற்றி முழுக்க ஒத்தனம் பிடித்தார். இதற்கிடையில் விஷயம் அறிந்து மதரும் வந்துவிட்டார். மதர் அவனை வந்து தொட்டுப்பார்க்க, “இப்போது பரவாயில்ல மதர்! மருந்து கொடுத்திருக்கன். இன்னும் கொஞ்சம் ஒத்தனம் குடுத்தா காலையில சரியாயிடும்” என்றார் சிஸ்ட்டர். சரியென தலையசைத்த மதர் அங்கே என் போல சத்தம் கேட்டு சில பிள்ளைகள் எழும்பி இருப்பதை கண்டு “சரி சரி நீங்க எல்லாம் படுங்க. காலைல ஸ்கூல் இருக்கில்ல… உங்க பிரண்டுக்கு சின்ன காய்ச்சல். காலைல சரியாகிடும். படுங்க.. படுங்க..” என்றார். நானும் படுத்தபடியே அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப்போனேன்.

காலையில் வழமை போல் எழும்பினேன். உடனே பக்கத்து கட்டிலை பார்த்தேன். அவன் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். சிஸ்ட்டர் வந்து அவனை தொட்டுப்பார்த்து மருந்து கொடுத்து விட்டு சென்றார். அவரின் நடவடிக்கை அவனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டதை உணர்த்தியது. நான் என் அன்றாட வேலைகளை செய்து ஸ்கூல் செல்ல தயாரானேன்.

அப்போது அங்கு வந்த மதர் “என்ன ரவி காய்ச்சல் சுகமாகிட்டா? ஸ்கூல் போறிங்களா? இல்ல ரெஸ்ட் எடுக்கிறிங்களா? ” என்று கேட்டார். என்ன தான் காய்ச்சல் மாறினாலும் அவன் முகம் அப்போதும் முதல் போல் வாட்டமுடனேயே காணப்பட்டடது. “நான் ஸ்கூல் போறன்” என்று ஒரே ஒரு பதில் மட்டும் வந்தது அவனிடமிருந்து. மதர் என்னைப்பார்த்து “கொஞ்சம் பொறு ஷெரின், இவன் ரெடி ஆனதும் இவனையும் உன் கூட கூட்டிட்டு போ. இவனும் உங்க கிளாஸ் தான் ” என்றார். நானும் தலையசைத்து விட்டு நின்றேன். அவன் தயாராகிய பிறகு நானும் அவனும் ஸ்கூல்க்கு நடக்க ஆரம்பித்தோம். அதுவரை அவனை கருத்தில் கொள்ளாத எனக்கு நேற்றைய சம்பவத்தின் பிறகு அவனுடன் பேச வேண்டும் என்று தோன்றியது. ” உன் பெயர் என்ன? ” என்றேன். பதில் இல்லை . ” காய்ச்சல் சுகமா? ” என்றேன். ஆம் என்னும் பாணியில் தலையை மட்டும் அசைத்தான். ஸ்கூலிலும் அமைதியாக தான் இருந்தான். ஆனால் படிப்பில் அதிகம் அக்கறை கொண்டவனாய் தென்பட்டான். ஸ்கூல் முடித்து ஹொஸ்டல் வந்தோம். அவனுடன் பேச எண்ணி அருகே சென்று “உன் பெயர் என்ன? ஏன் நீ வந்ததில் இருந்து கவலையா இருக்க? ” என்று கேட்டேன். அவன் ஏதும் பேசாமல் இருந்தான். அவன் மௌனம் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்போது தான் ஜோசித்தேன் ஒரு வாரமாய் என்னுடைய செயற்பாடும் இது தானே! இப்போது எனக்கிருக்கும் மனநிலை தானே மற்றவர்களுக்கும் இருந்திருக்கும்.…. அதற்கிடையில் சற்று நேரம் கழித்து “என் பெயர் ரவி” என்று குரல் வந்தது. “சரி… ஏன் கவலையா இருக்காய்? ” என்றேன். அவன் தான் ஒரு அநாதை என்றும் தன்னை தன் மாமா வளர்த்ததாகவும் அவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டதால் திக்கற்று நின்ற தன்னை மதர் இங்கு அழைத்து வந்ததாகவும் தயங்கி தயங்கி கவலையுடன் கூறினான். திடீரென உரத்து அழுதான். உடனே நான் அவனை தேற்றி “உனக்கு யாருமில்ல எண்டு கவலைப்படாத! நான் இருக்கிறன்.இனி நாம ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ். அழாதே!” என்றேன்.

அவனும் சற்று கவலை மறந்து புன்னகைத்தான். அவ்ளோ தான்…… நாட்கள் போக போக நாம் இன்னும் நட்பானோம். தினமும் ஸ்கூல் ஒன்றாய் போதல், ஒன்றாய் விளையாடல், சாப்பிடுதல் என சேர்ந்தே திரிந்தோம். மதரும் எம் இருவரின் மாற்றத்தை எண்ணி சந்தோசப்பட்டார். மாலை நேரங்களில் மாதா கோவில் முகப்பில் இருந்து கதை பேசல், விடுமுறை நாட்களில் சிரமதானம் செய்வது என நாங்கள் ஒன்றாய் திரிந்த தருணங்கள் ஏராளம். மகிழ்வாய் நாட்கள் நகர திடீரென வந்த அந்த நாள்…….அவனை நான் கடைசியாய் பார்த்த கணங்கள்……

ம்ம்ம்…..

அவை எல்லாம் இப்பதான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் இருபது ஆண்டுகள் ஓடி விட்டது. இப்போது நான் ஒரு மருத்துவராய் இருக்கிறேன். என் இந்த வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் காரணம் இந்த ஸ்கூலும் ஹொஸ்டலும், எல்லாத்துக்கும் மேலான என் மதரும் தான்.

“குழு இசை வழங்கிய மாணவர்களுக்கு நன்றி…. அடுத்ததாக பிரதம விருந்தினர் உரை… அதற்காக இவ்விழாவின் பிரதம விருந்தினர் டாக்டர் செல்வி. ஷெரின் ஜோசப் அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.”

அதுவரை அங்கிருந்த பிள்ளைகளின் குறும்புகளை கண்டு வேறொரு உலகத்தில் மூழ்கியிருந்த நான், ஷெரின்… என் பெயர்… யாரோ என்னை அழைக்கிறார்கள் என எண்ணி நிமிர்ந்து பார்த்தேன். அங்கே ஒலி வாங்கியுடன் என்னை பார்த்து புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தார் மதர். அப்போதுதான் நடப்பவற்றை சுதாகரித்துக்கொண்டு எனக்குள் நானே சிரித்தபடி ஒலிவாங்கி அருகே சென்றேன். சபையோருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்தேன். என்னுடைய வாழ்க்கை, நான் கடந்து வந்த பாதை, வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும். சிறு பாராயத்தை மகிழ்வாக கடக்க வேண்டும், கல்வியின் கட்டாயம், நற்பழக்கங்கள் கடைப்பிடித்தல் என பலதரப்பட்ட விடயங்களை நான் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அமைதியுடன் இருந்து ஆர்வமுடன் விடயங்களை செவிமடுத்து அவர்கள் தந்த வரவேற்பு என்னை மேலும் பல விடயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்தது. அதன் பின் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களையும் மதருடன் இணைந்து வழங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. பின் எங்கள் கல்லூரி கீதத்துடன் நிகழ்வு இனிதே முடிவடைந்தது. நான் அங்கிருந்த மாணவர்களுடனும் மதர் மற்றும் ஆசிரியர்களுடனும் உரையாடிவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்று என் கார் தரிப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் ஸ்கூல் மாதா கோவில் வாசலில் ஒரு பையன் அழுதுகொண்டிருந்தான். அவனருகே ஒரு சிறுமி அவனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். இதை பார்த்தவுடன் எனக்கு வேறு என்ன தோன்றும்……. அதே தான்…. அந்த சுட்டி குழந்தைகளை பார்த்து சிரித்தபடி தொடர்ந்து நடந்தேன்….

“பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காய் பொறுப்புடன் வளர்த்தாலே இங்கு காப்பகங்களின் எண்ணிக்கை பாதி குறைந்து விடும். ஏனென்றால் இங்கு யாருமற்று அநாதையாய் வரும் குழந்தைகளை விட பெற்றோர் இருந்தும் வாழ வழியற்று வரும் குழந்தைகளே அதிகம். இந்த சமூகத்தில் எப்படி தாய் தந்தையர் இல்லாது இந்த பிள்ளைகள் தவிக்கின்றார்களோ அதே போல் பிள்ளைகள் இல்லாமல் எத்தனையோ கணவன் மனைவிமார் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இங்குள்ள ஒரு பிள்ளையை தத்தெடுப்பதன் மூலம் அதற்கு ஒரு புதிய உலகத்தை காட்டி நல்லதொரு எதிர்காலத்தையே அமைத்துத்தர முடியும். எனது ரவிக்கு கிடைத்தது போல… ஆனால் இங்கு அதற்கு பெரும்பாலானோர் தயாராயில்லை. தங்கள் குழந்தை தங்கள் உதிரத்தில் வந்ததாய் இருக்க எண்ணுகிறார்கள். தங்களுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லையென்று உறுதியாய் தெரிந்த பின்னும் கோவில் குளம், பயனற்ற மருத்துவம் என பல வழிகளிலும் பணத்தையும் காலத்தையுமே விரயம் செய்கிறார்கள்.அவர்களுக்கு ஒன்று மட்டும் தான் சொல்ல விரும்புகிறேன். தாய்மை என்பது பெற்றெடுப்பதில் மட்டுமல்ல தத்தெடுப்பதிலும் இருக்கிறது. இதை எவ்வளவு சீக்கிரம் அவர்கள் உணர்கிறார்களோ அந்தளவுக்கு எதிர்கால சந்ததியை பாதுகாக்க முடியும்.” என்று நான் மேடையில் சொன்ன வார்த்தைகள் என் காதில் எதிரொலித்துக்கொண்டிருந்தன…..

அன்று எனது ரவியை அவர்கள் அழைத்து செல்கையில் என் மனம் உள்ளுக்குள் எவ்வளவு அழுது வருந்தி இருந்தாலும் அவனுக்கு ஒரு நல்லது நடக்கின்றது என்று மூளை சொல்லிக்கொண்டிருந்தது. அவனை நான் அன்று கடைசியாய் பார்த்தது…. அந்த காட்சி இன்னும் உயிர்ப்பாய் இருக்கிறது. அவன் இப்போது எங்கு இருக்கின்றானோ எப்படி இருக்கின்றானோ எதுவும் தெரியாது. ஆனால் நிச்சயம் அவன் மனம் போல் நல்ல நிலையில் சந்தோசமாய் இருப்பான்…….

என் பசுமையான நினைவுகளுக்குள் மீண்டும் என்னை அழைத்துச்சென்ற அந்த சூழலில் இருந்து மகிழ்வுடன் வெளியேறினேன்.

Written by : 

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Kanagapunitharajah Srikarshan
(Top 20 nominee)
Wordsville 2.0

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top