கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இவ்வுலகிலே நாம் எவ்வளவு தூரம் வரை சென்று கற்றாலும் நாம் அறியாத, புரியாத விடயங்கள் ஏராளம். இத்தகைய உலகில் புதியனவற்றுக்கான தேடலே எம்மை தனித்துவமான ஜீவராசிகளாக்குகின்றது. அந்தத் தேடலுக்கு நூல்களை விட சிறந்த துணைவர்கள் வேறு யார் இருக்க முடியும்?
நூல்களில் பலவகையுண்டு: புனைவுகள், சுயசரிதைகள், கவிதைத் தொகுப்புகள், மெய்யியல் நூல்கள், மற்றும் புனைவிலிகள் என்று வேறுபட்ட கருப்பொருள் மற்றும் வடிவில் நூல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. எந்தவொரு நூலின் வாசகரும் அதை நுகரும் போது தம்மை மறந்து நூலுடன் சங்கமிக்கும் அத்தருணமே என்னை இன்று வரை ஆச்சரியப்படுத்துகின்றது. திரைப்படம் போன்ற ஒலி,ஒளி ஊடகங்கள் எமக்கு சூழ நடைபெறும் அனைத்து விடயங்களையும் கண்கள் மூலமாகவே புலப்படுத்திவிடுகின்றன. ஆனால் நூல்களை நுகரும் வாசகர்கள் அந்தக் கதாப்பாத்திரங்களையும், சந்தர்ப்பங்களையும் தம் கற்பனையால் உருவாக்கி அக் கதாப்பாத்திரங்களுடன் பயணிக்கும் தன்மையே நூல்களின் தனிச் சிறப்பாகும்.நானும் கூட ஒரு காலகட்டத்தில் இன்றைய இளைஞர்களில் பலரையும் போல நூல்களில் நாட்டமற்றவனாய் இருந்தேன். ஒருநாள் தரம் 9ம் ஆண்டில் நான் சென்ற தமிழ் பிரத்தியேக வகுப்பின் ஆசிரியர் ஒர் கதையினைப் பற்றி பேச ஆரம்பித்து மிகவும் முக்கியமான திருப்பு முனையுடன் அக் கதைச் சுருக்கத்தை முடித்து கதையின் தொடர்ச்சியை அறிய விரும்புபவர்களை அந்தப் புத்தகத்தை வாசிக்கச் சொன்னார். அந்தக் கதையின் மீதத்தை அறியும் பெரும் ஆர்வத்துடன் நானும் அந்நூலினை வாசிக்கும் இலக்குடன் நூலைத் தேட ஆரம்பித்தேன். அந் நூல் வேறேதும் இல்லை, தமிழின் நாவல்களின் உச்சமாக இன்றும் போற்றப்படும் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்”.நூல் வாசிப்பு பயணத்தினை ஆரம்பிக்கும் எனக்கு பொன்னியின் செல்வன் நூல் பெரும் மலை போல் என் கண் முன் நின்றது. 5 பாகங்கள், ஏறத்தாழ 2200 பக்கங்களைக் கொண்ட ஓர் நூலை வாசிப்பது அத்தகைய எளிதான காரியமல்ல. இந்த எண்ணப்பாடு முதல் பாகத்தின் இறுதி வரை கூட மாறவில்லை என்று கூறலாம். ஆனால் இந்நூல் அதைத் தாண்டிச் செல்லச் செல்ல வற்றாத அட்சயபாத்திரமாய் கொடுத்துக்கொண்டே இருந்தது. வந்தியத்தேவனின் சாகசம் நிறைந்த பயணம், நந்தினியின் பழி தோய்ந்த சூழ்ச்சி, கரிகாலனின் வெறியும் வீரமும், அருண்மொழியின் தியாகமும், குந்தவையின் காதலும் அறிவும், பூங்குழலியின் துடுக்குத்தனமும், மந்தாகினியின் பரிவும் அன்பும் என்னை அக்கதாப்பாத்திரங்களுடனும், சோழ நாட்டின் அரசியலுடனும் பயணிக்கச் செய்ததடன். இந் நூலின் 2000 பக்கங்களையும் வெறும் ஆறே நாட்களில் இரவு பகலாய் என்னை வாசித்து முடிக்கச் செய்தது. என் கற்பனையிலேயே என் சோழ நாட்டையும், கதாப்பாத்திரங்களையும் வடிவமைத்து அதனுடன் என்னை பயணிக்கச் செய்தமையே நூல்களின் மாயாஜாலம். இந் நூலைத் தொடர்ந்து சோழ வரலாற்றை மையப்படுத்திய புதினங்களான உடையார், கங்கை கொண்ட சோழன் போன்ற நாவல்களையும், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என்று என் வாசிப்புப் பயணம் தொடர்ந்தது.
இத்தகைய நூல்கள் எம் கற்பனையாற்றலை மிகைப்படுத்துவதுடன், எம் மொழியாற்றலையும் மேம்படுத்தும். இன்று வேகமாக நகரும் சூழலில் எமக்கு தேவையான அனைத்தும் எம் கையிலேயே (அதுவும் chatgpt போன்ற தளங்களின் வருகையின் பின் உழைப்பே இன்றி தகவல்களைப்) பெறக் கூடிய இச் சூழலில் நூல்கள் ஏன் அவசியம் என்ற கேள்வி எழலாம். ஒர் புது நூலைக் கையில் எடுத்த பின் அதை முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் சுகம் வேறெங்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நூல்களிலிருந்து விளங்கி நுகரும் விடயங்கள் என்றும் எம்மால் மறக்கப்படப் போவதுமில்லை.எனக்கும் கூட இப்போதெல்லாம் முன்பைப் போல வாசிப்பதற்கான நேரம் அமைவதில்லை. ஆனாலும் இப்பண்பு இன்றைய சமூகத்தின் மத்தியில் அருகி வருவது வருந்தத்தக்கதாகும். வாசிப்பினை ஊக்குவிக்கும் முகமாக செப்டெம்பர் மாதம் “புதிய நூல் வாசிப்பு மாதம்” என அறிவிக்கப்பட்டு வாசிப்பினை ஊக்குவிக்கும் முகமாக அனைவரையும் புதிய நூல் ஒன்றினை வாசிக்க ஊக்குவிக்கும் விதமாக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கட்டுரை ஊடாக நூல்களை வாசிக்காதவர்களையும், என்னைப் போன்று வாசிப்பதை தொடர முடியாதவர்களையும் புது நூல் ஒன்றைத் தெரிவு செய்து இப்பயணத்தில் இணைய அன்புடன் அழைக்கின்றேன்
Written & Edited By: –
Rtr. Nitharshanan Sivabalasundaram
(Blog Team Member 2023-24)