“இண்டைக்கெண்டாலும் பூசைக்கு வா மகன்’’
அம்மம்மா மெல்லிய குரலில் அவன் காதினுள் கிசுகிசுத்தார். தன் அதிகாரம் அவனிடம் எடுபடாது என்பதையும் தாண்டி, தன் பேரன் மீது கொண்டிருந்த கலப்படமற்ற அன்புதான் அந்த மென்மையான, ஆன்மாவைத் தொடுகின்ற தொனிக்கான அடிப்படைக்காரணம். அது அவனிற்கும் நன்றாகத் தெரியும். எனவேதான் இப்போதெல்லாம் அந்தக் குட்டிக்கிழவி மீது ஏறி விழுவதைத் தன்னால் இயன்ற மட்டும் தவிர்த்து வந்தான். விடலைப்பருவத்திற்கான வேகம் அடங்கி, ஒருவித முதிர்ச்சி அவன் சாயலிலும் செயற்பாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தது. வீட்டாருக்கு இவையெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால் என்ன சொல்லியும், எவ்வளவு நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றியும், அவனைக் கோவிலுக்கு வரவழைக்க மட்டும் அவர்களால் முடியவில்லை. தன் ஒரே அன்புத் தங்கையின் வாழ்வு மலரமுன்னரே கருகி மடிந்ததைக் கண்ட அவனால் கடவுள் என்ற அதிமனித உருவகத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவனது இழப்பை ஈடுசெய்ய வல்ல மற்றொரு மாயாஜாலத்தை நிகழ்த்துவதன் மூலம் ‘கடவுள்’ தன் இருத்தலை நிரூபிக்கட்டும் என்று விட்டுவிட்டான். குறைந்த பட்சம், அனைவரும் நம்புகின்றபடி, அந்த மரணத்திற்கான பிரபஞ்ச ரகசியத்தையேனும் வெளிப்படுத்துவதற்கு அவரிற்கு கடப்பாடு உண்டென்று எண்ணிக்கொண்டான். கோவில் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அம்மா அப்பாவின் கட்டளைகள் எப்போதும் அவன் காதுகளை எட்டுவதில்லை. அவன் அம்மம்மாவின் நலிந்த கோரிக்கைகள் மட்டும் எப்போதாவது அவன் செவிப்பறைகளில் மோதும்.
“என்ன விசேசம்” தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலி அளவைக் குறைத்துவிட்டுக் கேட்டான். பதில் என்னவென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
“பெரிய வெள்ளி ராசா.. ஆண்டவர் செத்த நாளெல்லா? செத்தவீட்டுக்கு போகாட்டி சரியில்ல..” கிழவி தனக்கே உரித்தான வேடிக்கையோடு பேசினார். அவரின் மெல்லிய குரல் அவன் தலையை வருடி விடுவது போலிருந்தது.
“ஓ! செத்துட்டாரா? பின்ன ஏன் மினக்கெட்டு திரியிறீங்க.. பேசாம வாங்க ஒரு பீட்சா ஓடர் பண்ணுவம்” அவன் கண்களைச் சிமிட்டினான்.
“பெரிய வெள்ளிக் கிழமையான் நாத்து உனக்கு பீட்சா, தருவன் ராஸ்கல் பாத்துக்கொள்!” அம்மா அறைக்குள் இருந்து குரல் கொடுத்தார். மாலைத்திருப்பலிக்கான சேலைத்தெரிவுகளில் மும்முரமாக இருந்தபோதும் பீட்சாவை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அன்று பெரிய வெள்ளியல்லவா!
“அம்மம்மாக்காக வா அப்பன், ப்ளீஸ்…” கிழவி விட்டபாடில்லை. அவன் ஒரு பெருமூச்செறிந்தவாறே தலையைச் சொறிந்து கொண்டான். அந்த வேண்டுகோளைத் தன்னால் நிச்சயமாக நிராகரிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும்.
“சரி வாறன், எவ்வளவு நேரம் செல்லும்?’’
“அச்சாக் குஞ்சு” அம்மம்மா ஆசையாய் அவன் கன்னங்களை வருடி மோர்ந்து கொண்டார். அவன் கேள்வியை அவர் கண்டுகொள்ளவில்லை.
“ஆ! அப்ப ஆசந்தி முடிய அம்மம்மாவ நீ கூட்டிக்கொண்டு வா” அப்பா நாளிதளிற்குள் இருந்து தலையை நீட்டிக் கட்டளை போட்டுவிட்டு ஒரு ஆமை போல மீண்டும் தலையை நாளிதளிற்குள் இழுத்துக் கொண்டார்.
இந்தத் திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. எங்கேனும் ஓரமாக கொஞ்சநேரம் நின்றுவிட்டுத் திரும்பிவிடலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். அம்மம்மாவை அழைத்து வருவதென்றால் கோவிலில் அவர் கண்ணில் படும் தொலைவில் நின்றாக வேண்டும்.
“அப்பா நான்…”
“அது நல்லம், நீ என்னோட இரப்பன்” அம்மம்மா குழிவிழுந்த கன்னங்களோடு சிரித்தபடி கூறினார். அவன் சிக்கிக் கொண்டான்.
வழிபாடு சரியாக மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் என்று அப்பா கூறியிருந்தார். அம்மம்மாவை அழைத்துச் செல்லும் பொறுப்பை அவர் ஏற்றிருந்ததால் சற்றுத் தாமதாக செல்லலாம் என்ற நிம்மதி அவனுக்கு. ஐந்தரை மணிபோல கோவிலை நெருங்கியபோது குருவானவர் பீடத்தில் நின்றுகொண்டிருந்தார். மெதுவாகச் சென்று அம்மம்மாவின் பின்னாலிருந்த வாங்கில் வெறுமையாய் இருந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். அடுத்த இரண்டு மணிநேரத்தை எவ்வாறு கடத்துவதென்ற யோசனை அவனுக்கு, கோவிலுக்குள் அமர்ந்து கைப்பேசியை நோண்டிக்கொண்டிருக்க அவனுக்கு விருப்பமில்லை. தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களுக்காக அடுத்திருப்பவர்களின் நம்பிக்கைகளை உதாசீனம் செய்ய அவன் விரும்பியதில்லை. எனவே கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டான். அதிஷ்டவசமாக அவன் முன்னால் ப்றேமா அக்கா தன் குழந்தையோடு அமர்ந்திருந்தார். பல்லில்லாத அந்தப் பாலகனோடு கொஞ்சநேரம் போக்குக் காட்டலாம். குழந்தையின் சிமிட்டல்களும் சில கொட்டாவிகளுமாக நத்தை வேகத்தில் வழிபாடு நகர்ந்து கொண்டிருந்தது. அவன் இருத்தலை உறுதி செய்துகொள்வது போல அம்மம்மா இடைக்கிடை திரும்பிப் பாத்துக்கொண்டார். அவர் கண்காணிக்காமல் விட்டால் அவன் காற்றில் கரைந்து போவானோ என்ற கவலை அவரிற்கு.
நான்காவது விசுவாசிகள் மன்றாட்டு முடிந்து முழங்காலில் இருந்து எழும்பியபோது அவன் கண்கள் கைக் கோவிலில் அமர்ந்திருந்த அவள் மீது தற்செயலாக மோதின.
அவள்.
எப்போதும் போல ‘போனிட்டெய்ல்‘ அணிந்திருந்தாள். கேசம் சற்று நீண்டிருப்பது போல தெரிந்தது. முழு நிலாப் போன்ற அவள் முகம் கோவில் விளக்குகளின் ஒளிபட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. எப்போதும் போலவே தீவிரமான பாவனையில் அவள் புருவங்கள் நெருங்கியிருந்தன. அவன் எப்போதோ மறந்து போன செபங்களை அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
“ஆமென்’’
அனைவரின் பதிலும் ஒன்று சேர்ந்து கோவில் சுவர்களில் எதிரொலிக்க, எதையோ உணர்ந்தது போல அவள் சட்டென்று கண்களை உயர்த்தினாள். அவர்கள் பார்வைகள் சந்தித்த புள்ளியிலிருந்து புறப்பட்ட ஒரு சுழல் அவனைச் சிலவருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.
அவளைச் சந்தித்தது, பழகியது, அவளின் சிரிப்பு… யாரையும் எதையும் பற்றிய கவலைகள் ஏதுமின்றி, நகரும் கணத்தை முழுமையாகச் சுவைக்கும் அவளின் இயல்பைப் பிரதிபலிக்கும் அந்தச் சிரிப்பு.
அடுத்த ‘ஆமென்’ அவனை நிகழ்காலத்தில் பிடித்து நிறுத்தியது. அவன் மீண்டும் பார்த்தபோது அவள் குனிந்திருந்தாள்.
“அட இந்தச் சட்ட…!” வியப்பில் அவன் கண்கள் விரிந்தன. அவளின் பிறந்தநாளொன்றிற்கு தான் கொடுத்த அந்தப் பரிசை அவள் இன்னமும் வைத்திருப்பதை எண்ணி அவன் உண்மையில் மகிழ்ந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவள் நிமிர்ந்தாள். அத்தனை தொலைவிலிருந்து வந்த அந்தப் பார்வை அவன் ஆன்மாவை ஊடுருவிப் பாய்வது போலிருந்தது. அவன் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். அவளை எதிர்கொள்ளும் துணிவு அவனிடம் இல்லை. அது எப்போது வரும் என்பது பற்றிய எந்த எதிர்வுகூறல்களும் அவனிடம் இருக்கவில்லை. தொடர்ந்து வந்த வழிபாட்டுக் கொண்ணிலைகளைக் கடைப்பிடிப்பது பற்றி அவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஒருவித கவலையும், பயமும், வேதனையும், அவை அனைத்தையும் தாண்டி இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும் அவன் இதயத்தைத் தொற்றிக் கொண்டன. அவன் அந்த வாங்கிலேயே உறைந்துபோய் அமர்ந்திருந்தான். ஆனால் நினைவுகள் மட்டும் கடிவாளமேதுமின்றி அவன் இதயத்திற்கு நெருக்கமான அந்தப் புல்வெளி நெடுகிலும் மேயத்தொடங்கியது.
***
பல்கலைக்கழகத்தில் அறிமுகமான அந்தச் சின்னப் பெண். அறிமுகமான அனைவரும் பல்கலைக்கழக வாழ்வின் கேளிக்கை நிறைந்த அனுபவத்திற்காக வந்திருந்த போது கற்றலை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு பல்கலைக்கழகம் வந்திருந்த அவள். அதிகம் பேசாத, ஆடம்பரமில்லாத, எளிமையான அவனுடைய தோழி, காதலி, கடைசியில் யாரோ. அவளுடன் களித்த இனிமையான நாட்கள் தென்றலைப்போல அவன் இதயத்தை வருடிச் சென்றது. அவளுடன் எதைப்பற்றியும் உரையாட முடியும். எல்லா விடயங்கள் குறித்தும் அவளிடம் ஆயிரம் கருத்துக்கள் உறைந்து கிடக்கும். அவளுடனான உரையாடல்களில் அமைதியான புன்னகைகளிற்கும், சூடான விவாதங்களிற்கும் பஞ்சமிருப்பதில்லை. அவள் முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாத ஒரு பொக்கிஷம். அவன் வாழ்வில் கண்டெடுத்த மிக அரிய பொக்கிஷம் அவள்.
அவளைத் தொலைக்க வேண்டி வரும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அந்த விதியை அவன் நொந்து கொள்ளாத நாளே இல்லை. செய்யாத ஒரு குற்றத்திற்காக அவள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன்போன்ற முதுகெலும்பில்லாத ஒருவனைக் காதலித்ததைத் தவிர அவள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்பதை அவன் நன்கறிவான். எனினும் தன் இயலாமையை அவளிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் துணிச்சல் அவனிற்கு இல்லை.
தன் கண்களில் சூடான திரவம் நிறைவதை உனார்ந்தவுடன் கண்களை மூடிக்கொண்டான்.
தன் தங்கை விபத்தில் சிக்கி உயிருக்காய் போராடிக் கொண்டிருந்த போது, தான் அவளோடு தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தததை எண்ணி வெட்கித்துப் போனான். அன்று தான் வீட்டில் இருந்திருந்தால், தங்கையை விரைவாக வைத்தியசாலையில் சேர்த்திருக்கலாம், அவளைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற குற்றஉணர்வு அவனை வதைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய இயலாமையையும் கோபத்தையும் தொலைக்க வழிதெரியாமல் அவளைக் குற்றவாளியாக்கி விட்டான். முதிர்ச்சியற்ற ஒரு உணர்ச்சி வேகத்தில் தன்னுடைய இழப்பிற்கு அவளுடைய காதலைக் காரணம் கற்பித்து அந்த உறவை முறித்துக் கொண்டான். அவள் மீது பழிசொல்லுவதன் மூலம் தன் தோள்களில் விழுந்திருந்த சுமையைக் கரைக்க முயன்ற அவன், நாட்கள் செல்லச் செல்ல முட்டாள்த்தனத்தால் தனக்கிருந்த ஒரே ஆறுதலையும் தொலைத்துவிட்ட ஏக்கத்தில் நொருங்கிப் போனான்.
***
கண்களில் நிறைந்த நீர் கன்னங்களில் வழிவதற்குள் கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அவள் அவனை வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எந்தக் கைக்குட்டையின் பின்னும் ஒளிந்துகொள்ளும் முயற்சியில் அவள் ஈடுபடவில்லை. அவளினுடைய கண்கள் பளிங்கு போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த ஒளிர்வின் பின் வலி நிறைந்த ஒரு காதல் மௌனமாய் அழுது கொண்டிருப்பதை அவன் கண்டான்.
“அம்மம்மா..கோயிலுக்கு ஆரும் புது ஆக்கள் வந்தவையா?” வீட்டை நோக்கி மோட்டார்சைக்கிளைச் செலுத்தியவாறே கேட்டான். அம்மம்மாவிடமிருந்து பதிலில்லை.
“டாலிங், உம்மத்தான் ஐசே கேக்கிறன், ஆரும் புது ஆக்கள் வந்தவையா?” அவன் சற்று உரக்கப் பேசினான்.
“ஓம் ராசா, நீ ஆவெண்டு பாத்த பிள்ள புதுசாத்தான் வந்தவள் போல!” அம்மம்மா நமட்டுச் சிரிப்புடன் பதிலளித்தார். அவன் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த ஆயிரம் கேள்விகளையும் தாண்டி உதட்டோரமாய் ஒரு புன்னகை மலர்ந்தது.
“ஆரடா அவள்?” அம்மம்மா மீண்டும் அதே மென்மையான, ஆன்மாவைத் தொடுகிற தொனியில் கேட்டார்.
“உம்மட பேத்தி தான்” அவன் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கூறினான். அம்மம்மா விறுவிறுவென்று இறங்கி வந்து அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றார். அவரது கண்களில் பிரமிப்பு, மகிழ்ச்சி, குழப்பம் என்று பல்வேறு உணர்வுகளின் சாயல் படர்ந்திருந்தது.
“என்ன பாக்கிறீர்? நான் முடிக்கிற பிள்ள உமக்கு பேத்தி தானே!” அவன் சிரித்துக் கொண்டே படலையைத் தாண்டி மோட்டார்சைக்கிளைச் செலுத்தினான்.
பெரிய வெள்ளி முடிந்திருந்தது.
Written by :
Marin Mariathasan
(Top 20 nominee)
Wordsville 2.0