மகா சிவராத்திரி தினமானது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறையில் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் பகல் பொழுதில் சிறப்பு வழிபாடும், இரவு நேரத்தில் நான்கு ஜாமா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.மகா சிவராத்திரி விரத மகிமையை விளக்கும் விதமாக, “ மகா சிவராத்திரி கற்பம்” என்ற சிறிய வெளியிடப்பட்டது.
சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இந்த சிவராத்திரி விரதம் 5 வகைப்படும். நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். இதில் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரக்கூடிய மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது.
மகா சிவராத்திரி விரதம் எப்படி தோன்றியது?
ஒரு காலத்தில் உலகம் பிரளயம் ஆன பொழுது அனைத்து உயிரினங்களும் சிவனிடம் ஒடுங்கின. இதனால் உலகம் செயலற்று ஸ்தம்பித்தது. உலகம் மீண்டும் இயங்க வேண்டும் என்பதற்காக, கருணை உருவான அம்பிகை, சிவபெருமானை நோக்கி விரதம் இருந்து வழிபட்ட காலம் இந்த சிவராத்திரி காலம்.
இதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனாகதி முனிவர் உள்ளிட்டோர் இந்த சிவராத்திரி விரதம் இருந்து சிவன் அருள் பெற்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
விரதம் எப்படி கடைப்பிடிப்பது?
மகா சிவராத்திரி தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டு, சிவனுக்குரிய மந்திரங்கள், பதிகங்களை படிக்கலாம்.
இந்த நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நற்பலனை தரும். தண்ணீர் நிறைய குடிக்கலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், இளநீர், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் எக்காரணத்தைக் கொண்டும் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்த தினத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு ஏற்றி சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். அருகில் உள்ள சிவன் கோயிலில் இரவில் நடைபெறும் அபிஷேக பூஜைகளில் கலந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே சிவ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே கண் விழித்திருக்க வேண்டும்.
மகா சிவராத்திரி தினத்தில் இரவில் நடைபெறக்கூடிய நான்கு ஜாம அபிஷேக, பூஜைகளில் கலந்து கொள்வதோடு, மறுநாள் காலை பாரணை செய்து உணவு சாப்பிட்டு உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.சிவராத்திரி விரதத்தின் பலன்கள்சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.
Written By: –
Rtr. D. Sivadharshani
(Junior Blog Team Member 2024-25)
Edited By: –
Rtr. Quency Kananathan
(Junior Blog Team Member 2024-25)