மாணவர்களும் சமூக ஊடகங்களும்

இன்றைய காலகட்டத்தில் “உலகம் சுருங்கிவிட்டது” என்பார்கள். ஆனால் இன்றைய மாணவர்களுக்கு உலகம் அவர்களின் ஐந்து அங்குல மொபைல் திரைக்குள் அடங்கிவிட்டது எனலாம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் அல்ல; அவை மாணவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டன. தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சி மாணவர் சமுதாயத்திற்கு ஒரு வரமா அல்லது சாபமா என்ற கேள்வி எழும் வேளையில், இந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

சமூக ஊடகங்களை நாம் முழுமையாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. முறையாகப் பயன்படுத்தினால், அவை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பாலமாக அமைகின்றன. உலகத்தரம் வாய்ந்த பேராசிரியர்களின் விரிவுரைகள், கடினமான கணக்குகளுக்கான தீர்வுகள், அறிவியல் சோதனைகள் என அனைத்தும் இன்று யூடியூப் மற்றும் கல்வி சார்ந்த பக்கங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன. அதேபோல் கலை, கவிதை, புகைப்படம் எடுத்தல், கணினி நிரலாக்கம் போன்ற தனித்துவமான திறமைகளைக் கொண்ட மாணவர்கள், தங்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட சமூக ஊடகங்கள் ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து குழு ஆய்வுகள் செய்யவும், புதிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றன.

இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மாணவர்களிடையே கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. படிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெருமளவு நேரம் சமூக ஊடகங்களில் கடந்துசெல்வது பெரும் பிரச்சினையாக உள்ளது. தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வது (scrolling) ஒரு பழக்கமாக மாறி, கவன ஈர்ப்பைப் பாதிக்கிறது. பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பது, சமூக ஊடகம் மூலம் ஏற்படும் கவலை, தனிமை உணர்வு போன்றவை மாணவர்களின் மனநிலையை பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மை  உருவாகவும் வழிவகுக்கிறது. மேலும், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது, அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வது போன்றவை தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தலாம்.இதனுடன் நள்ளிரவு வரை திரையைப் பார்ப்பதால் ஏற்படும் தூக்கமின்மை மற்றும் கண் சோர்வு போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.

இந்தச் சூழலில், சமூக ஊடகங்களை முற்றிலும் தடை செய்வது தற்போதைய உலகில் சாத்தியமற்றது. இந்த இடத்தில் மாணவர்களுக்குத் தேவைப்படுவது சுயக்கட்டுப்பாடும் முறையான விழிப்புணர்வும் மட்டுமே ஆகும். மாணவர்கள் படிப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கப் பழக வேண்டும். அத்தோடு, சமூக ஊடகங்களை வெறும் அரட்டைக்கு மட்டும் பயன்படுத்தாமல், தொழில்முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ளும் தளங்களாகவும் மாற்ற பழக வேண்டும். வாரத்தில் ஒரு நாள் அல்லது நாளில் சில மணிநேரங்கள் மொபைல் போன் பயன்பாட்டைத் தவிர்த்து, குடும்பத்தினருடன் பேசுவதற்கும், புத்தகங்கள் வாசிப்பதற்கும், மைதானத்தில் விளையாடுவதற்கும் நேரத்தைச் செலவிடுவது சிறந்த மாற்றத்தைத் தரும்.

சமூக ஊடகங்கள் என்பவை கூர்மையான கத்தி போன்றது. அதைக்கொண்டு ஒரு பழத்தையும் நறுக்கலாம், அல்லது கையை காயப்படுத்திக் கொள்ளலாம். அது பயன்படுத்தும் நபரின் கைகளில் தான் உள்ளது. எனவே, இளைய சமுதாயமாகிய மாணவர்கள் சமூக ஊடகங்களின் மாய உலகிற்கு அடிமையாகாமல், அதைத் தங்களின் சுய முன்னேற்றத்திற்கான ஏணியாக மாற்றிக் கொள்ள வேண்டும். திரையைத் தாண்டி நிஜ உலகிலும் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன என்பதை உணர்வதே வெற்றிக்கான முதல் படியாகும்.

Written By: –

 

 

 

 

Rtr. Kishaalini Yohanathan
(Junior Blog Team Member 2025-26)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top