ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், சமூகத்தில் உள்ள அனைவரும் சமமான வருமானத்தையும் பொருளாதார வாய்ப்புகளையும் பெறுவதில்லை. சிலர் மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர்; மற்றவர்கள் அடிப்படை தேவைகளுக்குக் கூட போராடுகின்றனர். இவ்வாறு மக்களுக்கிடையில் வருமானம் சமமாகப் பகிரப்படாத நிலை “வருமான சமமின்மை” எனப்படுகிறது. இது உலகின் பல நாடுகளில் காணப்படும் முக்கியமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகும்.
வருமான சமமின்மை உருவாக பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதாக கல்வி வாய்ப்புகளில் காணப்படும் வேறுபாடு கருதப்படுகிறது. தரமான கல்வி பெறுபவர்கள் உயர்ந்த தொழில்களிலும் அதிக வருமானமுள்ள பணிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் பொருளாதார வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் சமூகத்தில் வருமான வேறுபாடு அதிகரிக்கிறது. மேலும் வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் செல்வத்தின் சமமற்ற பகிர்வு போன்ற காரணங்களும் இந்த நிலையை தீவிரப்படுத்துகின்றன.
வருமான சமமின்மையின் விளைவுகள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வறுமை அதிகரிப்பது அதன் முக்கிய விளைவாகும். குறைந்த வருமானம் கொண்ட மக்கள் உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரிப்பதால் சமூக அமைதி பாதிக்கப்படுகிறது. இது குற்றச்செயல்கள், வேலைஇல்லாமை மற்றும் சமூக மோதல்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது. மேலும் மக்களின் வாங்கும் திறன் குறைவதால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினையை குறைப்பதற்கு பல நடவடிக்கைகள் அவசியமாகின்றன. முதலில் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடிப்படையாகும். அதேபோல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குதல் மற்றும் சமூக நலத்திட்டங்களை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. மேலும் அரசாங்கம் சமமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
முடிவாக, வருமான சமமின்மை என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகும். இதனை குறைப்பதற்காக அரசு, தனியார் துறை மற்றும் மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். சமமான வாய்ப்புகள் மற்றும் நியாயமான பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே சமத்துவமான சமூகத்தை உருவாக்க முடியும்.
Written By: –

Rtr. Ilaxshana Rajeshkanth
(Junior Blog Team Member 2025-26)
Design By: –

Rtr. Kawindra Wickramasinghe
(Junior Blog Team Member 2025-26)

