உலக நீரிழிவு தினம்

வருடந்தோறும் நவம்பர் மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல்முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும்  2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக நீரிழிவு தினத்தினை உலகளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. நீரிழிவு தினமானது நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை உலக வாழ் மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதொன்றாகும்‌.  நீரிழிவு நோயிற்கான இன்சுலின் மருந்தினை கண்டுபிடித்த பிறட்ரிக் பான்ரிங்  அவர்களின் பிறந்தநாளினை நினைவுகூறும் முகமாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் என்பது உலகளாவிய ரீதியில் பரவலாக மக்களிடையே காணப்படும் ஒரு நோய் நிலைமையா கும். இது மனித உடலில் இன்சுலின்  ஹார்மோனின் குறைபாட்டால் அல்லது இதன் செயல்பாட்டின் பாதிப்பால் உண்டாகும் ஒரு நிலைமையாகும். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தின் அறிக்கையின்படி ஏறத்தாழ 537 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீரிழிவு நோயில், நீரிழிவு 1, நீரிழிவு 2 என இரு வகைகள் உள்ளன. நீரிழிவுநோய் 1 என்பது, உடலில் உற்பத்தியாகும் இன்சுலினின் அளவு குறைவடைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாகும். மேலும், நீரிழிவு நோய் 2 என்பது, உடலில் உற்பத்தியாகும் இன்சுலினின் செயல்திறன் குறைவடைவதால் ஏற்படுவதாகும். நீரிழிவு நோயின் காரணமாக இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, பார்வை இழப்பு,நரம்பு பாதிப்பு (Neuropathy) போன்றன ஏற்படலாம்.

இந்நோய் நிலைமைக்கான காரணிகளாக பொருத்தமற்ற உணவு பழக்கவழக்கங்கள், அதிக உடற்பருமன், மது பாவனை, மன அழுத்தம் மற்றும் பிறப்புரிமையியல் காரணி என்பவற்றை குறிப்பிடலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பதற்கிணங்க நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்.‌ இதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்உடனடி உணவுகளை தவிர்த்து (fast foods)பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பவற்றை அதிகமாக உட்கொள்ளல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக தியானம், யோகா பயிற்சி களை மேற்கொள்ளல் போன்றன அவசியமாகும். உலக நீரிழிவு தினமானது யாதேனும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டே வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-2026ம் ஆண்டுகளுக்கான கருப்பொருளாகநீரிழிவு மற்றும் நலவாழ்வுஎன்பதனை சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனம் அறிவித்துள்ளது

இக்கருப்பொருளானது நீரிழிவு நோயினால் பாதிப்புற்றுள்ள மக்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு உள நலத்தையும் சமூக ஆதரவையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏனெனில் நீரிழிவு நோயின் தாக்கங்கள் தனிநபரின் உடல் நலத்தை மட்டுமின்றி குடும்பங்களின் வாழ்க்கை தரத்தையும் சமூகங்களின் நலனையும் பாதிக்கின்றன. இந்நிலையில், உலக நீரிழிவு தினம் இந்நோயின் தாக்கங்களை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய வாய்ப்பாகும். ஒவ்வொரு நபரும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதோடு, விழிப்புணர்வு பணிகளில் கலந்து கொண்டு சமூக நலத்திற்கும் பங்களிப்பது அவசியமாகும். எனவே, “இந்நீரிழிவு தினத்தில் நீரிழிவிற்கு எதிராக நாமும் கைகோர்ப்போம்“.

Written By: –

 

 

 

 

Rtr. Madhurshana Balakrishnan
(Junior Blog Team Member 2024-25)

Edited By: –

 

 

 

 

Rtr. Quency Kananathan
(Junior Blog Team Member 2024-25)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments