இலங்கையின் சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு

“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைகிறது. இலங்கையைப் பொறுத்தவரை, தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி மற்றும் சுகாதார நிலை மிகவும் உயர் மட்டத்தில் உள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக விளங்குகிறது. இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. மக்கள் தொகையில் பாதியளவுக்கும் மேல் (சுமார் 52%) பெண்களாக இருக்கும் ஒரு நாட்டில், அவர்களின் பங்களிப்பின்றி முழுமையான அபிவிருத்தியை எட்டுவது சாத்தியமற்றது.

பெண்கள் குடும்பத்தின் மேலாளர்களாகச் செயல்படுகின்றனர். பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பெண்களின் விழிப்புணர்வு ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குகிறது. இலங்கையில் பெண் கல்வி அறிவு விகிதம் 90% க்கும் அதிகமாக இருப்பது, குடும்பக் கட்டமைப்பில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம், சமூக மட்டத்திலான தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. கிராம மட்டத்திலான மாதர் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக வறுமை ஒழிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் சமூக மேம்பாட்டிற்கு இவ்வளவு பங்களிப்பு செய்த போதிலும், அவர்கள் சில சவால்களைச் சந்தித்து வருகின்றனர். அவையாவன பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், ​பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மிகையான வேலைப்பளு என்பவற்றை குறிப்பிடலாம். வீடுகளிலும் பணியிடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், வீட்டு வேலைகள் மற்றும் வெளி வேலைகள் என இருமடங்கு சுமையைச் சுமப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது அவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்கின்றன அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

​இலங்கை ஒரு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால், பெண்களின் உரிமைகளை மதிப்பதோடு அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெண்களை வலுவூட்டுவது என்பது ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, இறுதியில் முழு நாட்டையும் வலுவூட்டுவதற்குச் சமமாகும்.

Written By: –

 

 

 

 

Rtr. Kishaalini Yohanathan
(Junior Blog Team Member 2025-26)

Design By: –

 

 

 

 

Rtr. Pravena Rajkumar
( Junior Blog Team Member 2025-26)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top