காலத்தின் சிற்பிகள்

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க தாம் பெற்ற கல்வியின் மூலம் பிறரும் இன்புறக்கண்டு, மென்மேலும் தாமும் கற்று, கேடில் விழுச் செல்வமாம் கல்வியினைப் பிறருக்கு போதிக்கும் நிறைமொழி மாந்தராம் ஆசான்கள் ஆவர். தனிமனிதனின்,  சமூகத்தின், ஏன்? ஒட்டு மொத்த நாட்டின் அபிவிருத்தியானது  முன்னோடிகளான ஆசிரியர்களிலேயே தங்கி உள்ளது. சிசுவானது பத்து மாதங்கள் கருவறையிலிருந்து இப்பிரபஞ்சத்திற்கு பிரவேசிக்கும் போது அன்னையானவள் எவ்வாறு சிசுவின் விரல் பிடித்து உலகை காட்டி மகிழ்வாளோ அதே போன்று இரண்டாம் கருவறையாம் வகுப்பறைக்கு மாணாக்கன் பிரவேசித்து நற்பிரஜையாக சமூகத்திற்குள் நுழையும் வரை ஆசான்கள், அகரத்திலிருந்து சிகரம் வரை இட்டுச்செல்லும் ஏணிகளாய்த் திகழ்கின்றனர். ஆசிரியர்களின் பணியானது பல்வேறு மாணாக்கரின் தேவைகளை கற்பித்தலின் நோக்கங்களுக்கு ஏற்புடையதாக்கி முழு கற்றல், கற்பித்தல் சூழலையும் ஒன்றிணைத்தலாகும். அன்றைய  காலம் தொட்டு இன்றைய காலம் வரை ஆசிரியத்துவ பாங்குகள், வரையறைகள் மற்றும் பார்வைகள் பாரியளவில் மாற்றம் கண்டிருப்பினும் எழுத்தறிவிக்கும் சிற்பிகளாம் ஆசான்களின் பங்களிப்பானது ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்திற்கு இன்றியமையாததன்றோ!

‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’, ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ எனும் பொன் மொழிகள் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. கல்வி எனும் அழியாச் செல்வத்தை வழங்கும் ஆசான்கள் கடவுளுக்கு நிகரானவர்களாக கருதப்படுகிறார்கள். மனிதனை பூரணத்துவமிக்கவனாக மாற்றுவது கல்வியாகும். ஆதலால், ஆசிரியத்துவமானது சமூக கட்டமைப்பின் மறுதலிக்கப்படமுடியாத தூணொன்றாம்.  ஒரு சமுதாயம் கல்வியறிவுள்ள சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்களே முக்கிய காரணமாவர். வாழ்க்கைக்கு அவசியமான அறிவு, பழக்கவழக்கங்கள், ஞானம் மற்றும் பலவற்றை போதிக்கின்ற ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். மாணவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்காக இருந்து அவர்களை சிறந்த பிரஜைகளாக மாற்றும் ஆசிரியர்களின் பணி அளப்பரியதாகும்.

கற்றறிந்த ஆசானிற்கு கிடைக்கும் அங்கீகாரம், அடையாளம் என்பன சிறப்பானவையாகும். ஆசிரியத்தொழிலின் சிறப்பானது யாதெனில் ஆசிரியர் இவ் உலகை விட்டு மரித்தாலும் கூட அவரது கல்வியும், மாணாக்கர்களுக்கு கடத்திய அறிவும் என்றும் மரிப்பதில்லை. மாறாக புத்தகங்கள், படைப்புக்கள் மற்றும் அவர் உருவாக்கிய ஆளுமைகள் மூலமாக ஆசிரியத்துவமானது சாசுவதமாக நிலைத்திருக்கும். இன்றைய ஆசிரியத் தொழிலில் வழங்கப்படும் தவணை விடுமுறைகள் அவர்கள் தம் குடும்ப-வேலை சமநிலை பேணவும், உளவியல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவுகின்றன. காய்த்த மரம் கல்லடி படுவது போல் அவர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் ஏராளம். அவற்றையெல்லாம் தாண்டி தமது ஆத்ம திருப்திக்காக அர்ப்பணிப்புடன் கடைமையாற்றும் ஆசான்கள் இன்றளவிலும் உள்ளனர். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்பதற்கிணங்க கல்வியின் மகத்துவத்தை அறிந்து, கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு தம்மை அர்ப்பணிக்கும் பெருமை மாந்தர் இவர்கள்.

அன்றைய ஆசிரியத்துவத்தை எடுத்து நோக்கினால் குருகுலக்கல்வியானது இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் இருந்தமையை அறிந்து கொள்ளலாம். மாணாக்கர் குருவிடம் சென்று, அவருடனேயே தங்கி, சேவைகளாற்றி வேதம்,புராணம், அரசியல், போர்க்கலை, மருத்துவம் என பல்கலைகளைக் கற்றுக்கொள்வர். அகிலம் போற்றும் பாரத காவியமானது அர்ச்சுனன்-துரோணர், ஏகலைவன்-துரோணர் இடையிலான குரு சிஷ்ய உறவினை அற்புதமாக விளக்கி நிற்கின்றது. கண்டிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடனான கல்வி முறைமை காணப்படினும் மாணவருக்கான சுதந்திரம், சுய கற்றல் என்பன அன்றைய ஆசிரியத்துவத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறைபாடாம். இன்றும், இலங்கையில்  சமயம் சார் கற்கைகள் சில இம்முறையில் நிகழ்வதை காணலாம். மேலைநாட்டவர்களின் காலனித்துவத்தின் கீழ் இலங்கை இருந்த காலகட்டத்தில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியதாகும். அக்காலகட்டத்தின் ஆசிரியத்துவமானது கற்றறிந்த சமுதாய விருத்திக்கும், இலங்கையர் அரசியலில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக அமைந்ததுடன் சுதந்திர இலங்கையின் தோற்றத்திற்கு வழி கோலியது.

பாரதி கண்ட புதுமைப் பெண்களாக இன்று மாதர் பல்துறைகளில் மிளிர்ந்து வருகின்றனர் என்றால் அதற்கு காரணம் அவரவர் துறைகளில் பெற்ற கல்வியாகும். இதன் ஆணிவேர்களை ஆராய்கையில் தவிர்க்கப்படமுடியாத ஒரு பெயர் சாவித்திரி பாய் புலே. இந்தியாவில் பெண்கள் உரிமைகள் அடக்கப்பட்டு, கல்வியானது மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கான பள்ளிகளை ஆரம்பித்து பெண்கள் கல்விக்காக போராடிய இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். ஆசிரியத்துவத்தில் தாய்மை அவதானிக்கத்தக்க ஒன்றாகும். பல கனவுகளுடன் பள்ளி செல்லும் சிறார்க்கு அன்பூட்டி, கண்டித்து நல்வழிப்படுத்தபவர்கள் ஆசான்கள். ஆசிரியர் தினமானது டாக்டர்.ராதாகிருஷ்ணனது பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது. இவர் கல்வி ஆணையத் தலைவராக இருந்து சிறந்த கல்விக் கொள்கைகளை உருவாக்கி இந்தியக்கல்வித் திட்டத்தில் புரட்சியை உண்டாக்கியவர். ஆசிரியப்பணியாம் அறப்பணி செய்வோர் ஒரு நாள் மட்டுமல்ல தினம் தினம் கொண்டாடித் தீர்க்கப்படவேண்டியவர்கள்.

முற்காலத்தில் குருவாக கருதப்பட்ட ஆசிரியர் தற்காலத்தில் வழிகாட்டியாக கருதப்படுகின்றார். சமூக,கலாச்சார, தொழினுட்ப மாற்றங்களினால் நவீன உலகில் கல்வி முறைகளும், ஆசிரியர்களின் பங்களிப்பும் மாற்றமடைந்துவிட்டன. ஆசிரியர்-மாணவர்களுக்கிடையிலான உறவு முறை மாறிவிட்டமையின் காரணத்தினால் ஆசான் மீதான பயம், மரியாதை குறைவடைந்து அவர்களுக்கிடையிலான உறவு விரிசலடைந்துள்ளது. இந்த நவீன யுகத்தில் மாணவர்கள் தவறான பாதையில் வழிமாறி செல்வதற்கு மாணவர்கள் மீதான கண்டிப்பு குறைவடைந்தமை ஒரு காரணமாகும் என்பது திண்ணம்.இன்றைய கல்வி முறைகளில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களில் முக்கியமானது மாணவர்களை மையப்படுத்திய சுயகற்றலாகும். இதில் மாணவர்களே அவர்களின் கல்விக்கு பொறுப்பானவர்கள் என்பதுடன் அவர்கள் தாமாக தேடி படித்து தமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர். மேலும், பல நவீன கல்வி முறைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, கூட்டு கற்றல் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாணவர்கள் குழுவாக இணைந்து பாடநெறி தொடர்பாக ஆராய்ந்து, அவர்களுக்கிடையில் கலந்துரையாடி விளங்கிக் கொள்ளுதலாகும். மேலும் ‘Edutainment’ முறையானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இது ‘Education’, ‘Entertainment’ எனும் சொற்களின் சேர்க்கையின் மூலம் உருவான இம்முறை கல்விச் செய்முறையை திறமையாகவும், திறம்படச் செய்யவும் உதவுகின்றது. இது போன்ற பல முறைகள் உள்ளன.

கடந்த ஒன்றரை வருடமாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் கல்வி முறையானது முற்றாக மாற்றமடைந்துள்ளது. வகுப்பறை கல்வியிலிருந்து நிகழ்நிலை வகுப்புகளுக்கு கல்வி முறைமை நகர்வடைந்ததுடன் இணைய வசதிகளை பெறமுடியாத ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பெரும் சவாலாக உள்ளது. ‘கூகுள் மீட்’ அல்லது ‘சூம்’ போன்ற செயலிகளுக்கூடாக தற்போது வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும் கூட கல்வி நிறுவன வளாகங்களில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களை பெறமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நிகழ்நிலை வகுப்புக்களில் ஆசிரியர் கேட்கும் வினாக்களுக்கு பெரும்பாலான மாணவர்கள் விடையளிக்காமல் மௌனமாக இருப்பது பல ஆசிரியர்களை வருத்தத்திற்குள்ளாகின்றது. பொதுவாக வகுப்பறைகளில் ஆசான்கள் கற்பவர்களின் முகபாவனைகளின் மூலம் அவர்கள் விளங்கிக் கொண்டார்களா என ஓரளவிற்கு அறிந்து கொள்வார்கள். துரதிஷ்டவசமாக, இந்த இணையவழி மூலமான கற்கையில் மாணவர்களின் புரிதல் நிலையை அறிந்து கொள்ள முடியாதிருப்பதனால் ஆசிரியர்கள் தம்மால் இயன்றளவு முயற்சியெடுக்கின்றனர். மேலும் சில அனுபவமிக்க, வயதில் மூத்த ஆசான்கள் தொழில்நுட்ப கருவிகளை கையாளுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் மாணவர்களின் கேலிக்குள்ளாகின்றனர். இணையவழி மூலமான கல்விமுறையில் சவால்கள் இருப்பது போல நன்மைகளும் காணப்படுகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கல்வி நடவடிக்கைகள் முற்றாக தடைப்படாமல் ஓரளவுக்கேனும் நடத்திச் செல்வதற்கு நிகழ்நிலை வகுப்புக்கள் உறுதுணையாகவுள்ளன.

நவீன கல்விமுறையில் காணப்படும் சில குறைபாடுகள் கல்வியின் தரத்தை குறைக்கின்றன. தற்பொழுது பணம் பார்க்கும் தொழிலாக கல்வியும், ஆசிரியத்தொழிலும் மாறி வருகின்றன. மாணவர்களுக்கு அறிவூட்டி எழுச்சி பெற வைக்கவேண்டிய கல்விக்கூடங்கள் வியாபார நிலையங்களாக மாறியுள்ளன. ஆசிரியப்பணி என்பது ஊதியத்திற்காக மட்டும் செய்யப்படும் தொழில் அல்ல அதனையும் தாண்டி ஓர் தொண்டாகும். சில ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை மட்டந்தட்டுவது, தன்னிடம் தனியார் வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சில மாணவர்கள் பாடங்களை ஒழுங்காக விளங்கிக் கொள்ளாமல் பரீட்சைகளில் சித்தியடைவதை மட்டும் நோக்காகக் கொண்டு மனப்பாடம் செய்கின்றனர். மேலும் அடிப்படை வசதிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் இயங்கும் சில கிராமப்புற பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். சமூகத்தின் ஏணிகளாக தொழிற்படும் ஆசிரியர்களின் பிரச்சினைகளும் ஆராயப்பட வேண்டியவையே. கற்பித்தல் துணைச்சாதனங்களின் பற்றாக்குறை, பலவீனமான கற்றல் சூழல், குறைவான ஊதியம் என்பன ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களாகும். இப்பிரச்சினைகள் முறையாக தீர்த்து வைக்கப்பட்டால் அவர்களது செயலாற்றுகை விளைதிறன் மிக்கதாக அமையும்.

மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களையும், எதிர்காலத்திற்கு உகந்த புத்திசாதுர்யமான நற்பிரஜைகளையும் தோற்றுவிக்கும் பலப்பரீட்சையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி ஒர் உருகும் மெழுகுவர்த்தியாக தம்மையே உருக்கி பிறரின் நலனுக்காய் ஒளிர்ந்திடும் நிலையில் மாணவர்களின் எழுச்சிக்கு வித்திடும் ஆசிரியர்களின் நலனிலும் நம் சமூகம் அக்கறை கொள்ள வேண்டும். ஞானம் எனும் வெளிச்சத்தை கொடுக்கும் உன்னத பணியாற்றும் ஆசிரியர்கள் என்றென்றைக்கும் மதிப்பிற்குரியவர்கள். அத்துடன் நவீன கல்வி முறைகளின் மூலம் அதிகபட்ச பயனைப் பெற்று அதில் காணப்படும் குறைபாடுகளை அகற்றினால் கல்வியின் தரம் உயரும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

Written By:

Rtr. Vathsankithasarma Vijayakumar
(Blog Team Member 2021-22)

Rtr. Dilshani Chrishendra
(Blog Team Member 2021-22)

Spread the love
guest
0 Comments
Inline Feedbacks
View all comments