நாள்தொறும் எனக்கு புத்துணர்வளிக்கும்
உன் ஸ்பரிசத்தை தொலைத்தேன்
என் சிரத்தில் சிறு காயங்கள் தரும்
உன் செல்லக்கடிகளையும் தொலைத்தேன்
உன் மென்விரலிடை மிடையும்
என் பாக்கியத்தை தொலைத்தேன்
எப்பொழுதும் எனை உடனழைத்துச்செல்லும்
என்னினிய நட்பையும் தொலைத்தேன்
தடுக்கிய போதெலாம் ஆறுதல் தந்த
நின் இதழ் முத்திரையை தொலைத்தேன்
பொழுதெலாம் என் செவிக்கின்பம் பாய்ச்சும்
நின் குரல் நாதத்தையும் தொலைத்தேன்
எனக்காய் தன் உயிர்தோழியைப் பகைத்த
என்னிள நங்கையைத் தொலைத்தேன்
உனைப்பிரிந்த தினம் அன்றே
என் அடையாளத்தையும் தொலைத்தேன்
இதுவரை என் வசிப்பிடமாய் இருந்த
உன் மேசையை தொலைத்தேன்
என்னையே ஆசையுடன் சுற்றிவரும்
உன் துடுக்குமிகு விழிகளையும் தொலைத்தேன்
முத்திங்கள் உன் மதிவதனம் காணாது
என் நயனப் பார்வையைத் தொலைத்தேன்
மென்னதர வருடல்கள் கிடைக்காது
என் இயக்கத்திற்கான சக்தியையும் தொலைத்தேன்
புத்துணர்வளிக்கும் ஸ்பரிசத்தை உணராது
என் வாழ்வுக்கான கொடிமரத்தை தொலைத்தேன்
உன் கிள்ளைமொழிதனைக் கேட்காது
என் ஆன்மநாதத்தையே தொலைத்தேன்
எஞ்சியிருக்கும் உயிர்த்துளியையும்
நான் ஆவியாக்கித் தொலைக்கிறேன்
இனியுன் விரலுடன் சரசமாடும் தகுதியை
நான் என்றோ தொலைத்துவிட்டதால்
இப்படிக்கு:
நீ ஆசையுடன் பயன்படுத்தி
வகுப்பறை மேசையில் விட்டுச்சென்ற
அட்லஸ் பேனா..
Written By:
Abhirami Ravindranathan
Creative Content
Wordsville’20