பயணம்…

“ராமசாமி… ராமசாமி… ” வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். “ராமசாமி…. யோவ் ராமசாமி… ” மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு அடுப்படியிலிருந்து அம்மா வாசற்பக்கம் போனார்கள். “கடன் குடுக்கிற எண்ணம் இல்லையோ? எங்க ராமசாமி? ” என வந்தவர் என் தாயை அதட்டும் பாணியில் பேசினார். அம்மாவும் எதிர்த்து எதுவும் பேசாமல் நிசப்தமாய் நின்றார்கள். ஆவேச வார்த்தைகள் பல அடுக்கடுக்காய்… அதற்குள் வெளியே வேலையாய் சென்றிருந்த அப்பா வந்து விட்டார். அம்மாவை உள்ளே செல்ல சொல்லிவிட்டு வந்தவரிடம் சமரசமாய் பேசி ஒரு வழியாய் அனுப்பி வைத்தார். உள்ளே வந்த அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவின் முகமும் வாடி இருந்தது. ஏதோ யோசித்த வண்ணம் திண்ணையில் அமர்ந்தார். இங்கே நடப்பவற்றை புரிந்தும் புரியாமலும் கவனித்து கொண்டிருந்த என்னை கண்ட அப்பா, உடனே முகம் மலர்ந்து என்னை கட்டி அணைத்துக்கொண்டார். என் அப்பா தான் என் உலகம். காலையில் எழுவது தொடங்கி இரவு உறங்கும் வரையிலும் பெரும்பாலும் அப்பாவுடனேயே என் பொழுதுகள் கழியும்.

காலையில் எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் அப்பாவை தேடி வீட்டோடு இருக்கும் மிதிவண்டி கடைக்கு போய் விடுவேன். அப்பா அங்கே வேலை செய்து கொண்டிருப்பார். நான் சென்று அருகிலிருந்து அப்பாவின் செயற்பாடுகளை பார்த்து கொண்டிருப்பேன். எங்கள் குடும்பம் நடுத்தரமானது தான். இந்த மிதிவண்டிக்கடையை நம்பி தான் எங்கள் அன்றாட வாழ்வு. எனக்கு இரண்டு தங்கைகள். நானும் என் முதல் தங்கையும் ஊர் கலவன் பாடசாலையில் படிக்கின்றோம். இளையவள் அடுத்த வருடம் தான் ஓராம் ஆண்டு. எனக்கு பள்ளி செல்ல கள்ளம். அது இது சொல்லி போகாமல் நிற்பேன். அப்பா தான் என்னை கஷ்டப்பட்டு அனுப்பி வைப்பார்.

பள்ளி செல்லும் நேரம் தவிர மிகுதி நேரமெல்லாம் நான் அப்பாவுடன் மிதிவண்டி கடையில் தான் இருப்பேன். அங்கு அப்பாவிற்கு உதவியாக சாவிகள்,  நட்டுகள் எடுத்து கொடுத்து உதவுவேன். சில நேரம் பழைய மிதிவண்டிகளை அப்பாவை போல திருத்துவதாக ஏதேதோ செய்து கொண்டிருப்பேன். இரட்டை காலில் மிதிவண்டியை விட்டு அதை ஓட்டி ஏதோ உலகத்தையே சுற்றி வந்தது போல் மகிழ்ந்த காலம் அது. வருமானம் பெரிதாய் இல்லாவிடிலும் அப்பா எங்களை குறையின்றி வளர்த்து வந்தார். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இடையிடையே யார் யாரோ வந்து அப்பாவுடனும் அம்மாவுடனும் கோபமாக பேசி செல்வார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் எதை பேசுகிறார்கள் என்று அர்த்தம் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்பாவும் அம்மாவும் கூட அவை பற்றி என்னிடம் கூறியதில்லை.

எல்லாம் நன்றாய்,  நாட்கள் மகிழ்வாய் சென்று கொண்டிருந்தன. கடைசி தங்கையும் பள்ளி வர ஆரம்பித்து விட்டாள். அன்றும் வழமை போல் காலையில் எழுந்து அப்பாவின் கடைக்கு போய் விட்டு, பின்னர் தங்கைகளுடன் பள்ளிக்கு புறப்பட தயாரானேன். என்றும் இல்லாதவாறு அப்பா எங்கள் மூவரையும் கட்டியணைத்து “கவனமாய் இருக்க வேண்டும் என் செல்வங்களே! ” என்றார். எனக்கு அன்றைய நாளே வித்தியாசமாய் தான் தெரிந்தது. எதிர் வீட்டு மாடு கூட ஓயாது கத்திக்கொண்டேயிருந்தது. மனதுக்குள் எனக்கு ஏதோ இனம்புரியாத பய உணர்வு.  சரி என்று பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் இடைவேளை முடிந்து அடுத்த பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர் சுந்தரம் மாமா என் இரண்டு தங்கையையும் அழைத்துக்கொண்டு என் வகுப்பு வாசலில் வந்து நின்றார். அவரும் என் ஆசிரியரும் ஏதோ கதைத்து கொண்டனர். என்ன கதைக்கிறார்கள் என புரியவில்லை. சிறிது நேரம் கழித்து என் ஆசிரியர் பதற்றத்துடன் “கேசவன்… ” என்று அழைத்தார். நான் உடனே எழும்பி நிற்க, ” இவர் உங்கள  அழைத்து செல்ல வந்திருக்காரு. நீங்க புத்தக பையை எடுத்து கொண்டு இவரோட போங்கோ… ” என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை.  ஏன் என்று கேள்வி கேட்கவும் நேரம் தரவில்லை.

சுந்தரம் மாமா விரைந்து வந்து என் பையில் புத்தகங்களை வைத்து என்னையும் என் தங்கைகளுடன் பள்ளியில் இருந்து அழைத்து சென்றார். சுந்தரம் மாமா முகம் சோகமாய் காணப்பட்டது. அப்படியே என் தங்கைகளை பார்த்தேன். அவர்களுக்கு எனக்கு தெரிந்த அளவு கூட விபரம் தெரியவில்லை. அவர்கள் ஏதோ வீட்டுக்கு வேளைக்கு செல்கிறோமென மகிழ்வுடன் இருந்தார்கள். “ஏன் மாமா…  ஏன் எங்கள வேளைக்கு கூட்டி போறீங்க?  எங்க கூட்டி போறீங்க? ” என்று கேட்டு கொண்டே வந்தேன்.  ஆனால் மாமாவிடமிருந்து எந்த தெளிவான பதிலும் இல்லை. “சொல்றன்… வாங்கோ.. ” என்றபடி கூட்டி வந்தார். வழமையான பாதையில் தான் வருகிறோம். ஆகவே வீட்டுக்கு தான் போகிறோம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் காரணம் மட்டும் இன்னும் தெரிந்தபாடில்லை. வீட்டை நெருங்கினோம். எங்கள் வீட்டு தெருவில் சன நடமாட்டம் அதிகமாய் தெரிந்தது. கூடவே பெண்கள் அழும் குரலும் கேட்டது. பயம் என்னை தொற்றிக்கொண்டது. இதய துடிப்பு பன்மடங்கானது. எல்லோரது பார்வையும் என் மீதும் என் தங்கைகள் மீதும் தான். அவர்கள் எல்லோர் முகத்திலும் கவலை குடி கொண்டிருந்தது. வீட்டு வாசலை அடைந்தோம். வீட்டின் உள்ளேயும் ஆட்கள் இருந்தனர். நாங்கள் உள்ளே செல்ல யாரோ ஒரு கிழவி ” அப்பு ராசா…  ஐயோ.. ஓ… ஐயோ… ” என்று என்னை கட்டி அணைத்து பீறிட்டு அழுதாள். ஒரு கணம் நான் ஸ்தம்பித்து விட்டேன்.  கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. “ஏன் இந்த கிழவி இப்படி அழுகிறாள்” என எண்ண, உடனே சுந்தரம் மாமா எங்கள் பைகளை வாங்கி கொண்டு எங்களை வீட்டு விறாந்தைக்கு கூட்டி சென்றார். அங்கே கட்டிலில் யாரோ படுத்திருந்தார்கள். அருகே அம்மா கதறி அழுதபடி இருந்தார். அம்மாவை கண்டவுடன் “அம்மா… அம்மா.. ” என்று அம்மாவின் அருகே சென்றேன். அம்மா என்னை கண்டதும் என்னை கட்டியணைத்து “ஐயோ… ” என மேலும் உக்கிரமாய் அழ தொடங்கினார். நான் உடனே “ஏன் அம்மா அழுறாய்… என்ன நடந்த? ஏன் இவை எல்லாம் இங்க நிக்கினம்?  அப்பா எங்க அம்மா? … ” என குரல் நடுநடுங்க கேட்டேன். அம்மா மேலும் பலத்து அழ தொடங்கினார். அந்த கட்டில் கண்ணில் படவே, அதில் படுத்திருப்பது யார் என்று பார்த்தேன். அங்கே அப்பா கண்கள் மூடி படுத்திருந்தார். “அப்பா… அப்பா… என்னப்பா ஆச்சு..  எழும்புங்கோ அப்பா.. ” என கதறினேன். என்னை அறியாமல் உரத்து அழுதேன். “அம்மா… அப்பா ஏன் அம்மா படுத்திருக்கார்?  அப்பாக்கு என்னம்மா ஆச்சு? அப்பாவை எழும்ப சொல்லுங்க! “என அம்மாவை கட்டி அழுதேன். ஆம் என் அப்பா இறந்து விட்டார். அங்கு படுத்திருப்பது என் அப்பா தான். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்று காலை அன்போடு எம்மை வழியனுப்பிய முகம், சலனமற்று சுருங்கி கிடக்கிறது. செய்வதறியாது கதறி அழுதேன். அழுது அழுது இயலாமல் சற்று மயங்கி விட்டேன். மயங்கிய நான் சற்று நேரம் கழித்து கண் விழிக்கையில் அருகே சுந்தரம் மாமா நின்று கொண்டிருந்தார். “ஏன் மாமா அப்பாக்கு என்னாச்சு? ” என பேச கூட திராணி இல்லாமல் கேட்டேன். அவர் என்னை தேற்றியபடி “அப்பாக்கு இன்னைக்கி காலையில கடைல இருக்கேக்க திடீரெண்டு நெஞ்சு வலி !நெஞ்ச புடிச்சொண்டு அப்டியே சாஞ்சவர் தான். எந்திரிக்கவே இல்லை…” என கலங்கும் குரலில் சொன்னார். “என்ன நெஞ்சு வலியா? ” “ஓம் அப்பு… இது மூண்டாவது தரம். ஏற்கனவே ரெண்டு தரம் இப்பிடி வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனம். ஆனால் இந்த முற ஒண்டும் செய்யேலாம போச்சு. உடனயே உயிர் போச்சு! “
“அப்பாக்கு நெஞ்சுவலியா! ஏற்கனவே வந்திருக்கா? எதுவும் எனக்கு தெரியாதே! அப்பா ஏன் அம்மா கூட என்னிடம் சொன்னது கிடையாதே !” தன்னுடைய கஷ்டங்களை அப்பா தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டார் என்பது அடுத்து எனக்கு கிடைக்கவிருந்த அதிர்ச்சியில் இருந்து புலப்பட்டது.
“சரி வா கேசவா! போய் தோய்ந்து விட்டு வா, உன் அப்பாவுக்கான இறுதி கிரியைகளை செய்ய வேணும்.” ஏற்க மறுத்தாலும் நிதர்சனத்தை சுதாகரித்து கொண்டு,  சென்று கிரியைகளில் அமர்ந்தேன் . தங்கைகளை பார்த்தேன். அழுது களைத்து அம்மா மடியில் உறங்கி விட்டார்கள். உள்ளுக்குள் கவலை ஒரு புறம். அப்பா இன்றிய நம் எதிர்காலம் பற்றிய பயம் ஒரு புறம். கிரியைகளை குறையின்றி முடித்து அப்பாவின் உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட தயார் செய்யப்பட்டது. அம்மா உரத்து அழ, நான் முன்னே கொல்லிகட்டையுடன்  நடந்தேன். பறை மேளங்கள் வானை பிளக்க, அப்பா வீட்டை விட்டு வெளியேறினார். இந்த பறை மேள சத்தமென்றாலே எனக்கு பயம். அபசகுணத்தின் வெளிப்பாடாகவே அதை நான் கருதினேன். அண்டை அயலில் இந்த சத்தம் கேட்டாலே உடனே போய் வீட்டுக்குள் காதை பொத்தி ஒழிந்து கொள்வேன். இன்று எவ்வித உணர்வுமின்றி சடமாய் நடந்து போகிறேன் அவற்றின் அருகே… சுடலையை அடைய அடைய அப்பாவை எரிக்க போகிறார்களே! அப்பாவின் முகத்தை இனி என் வாழ்வில் எங்கே காண போகிறேன் என்ற படபடப்பு அதிகமானது. சுடலையை அடைந்தோம். அங்கேயும் ஒரு சில கிரியைகளை முடித்து, கொல்லிகட்டையை கையில் கொடுத்தார்கள். அப்பாவின் முகம் மூடப்பட்டது. எம்மை அன்போடு வளர்த்த அந்த இன்முகத்தை இனி எங்கே காண போகின்றேனோ ! என எண்ணி உரத்து அழுதேன்.

கூடி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்படுத்தி கொல்லியிட வைத்தார்கள். எல்லாம் முடிந்து விட்டது. ம்ம் ம்…..  இயற்கை மேல் கோபம் எழுகிறது. நேற்று இந்நேரம் எங்களோடு சிரித்து பேசி மகிழ்ந்த அப்பா இப்போது இல்லை. இவ் உலகில் எதுவுமே நிலையற்றது என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது. எல்லாம் முடிந்து வீடு வந்தேன். அம்மாவும் தங்கைகளும் அழுது அழுது களைத்து உறங்கி விட்டார்கள். நான் சென்று தோய்ந்து விட்டு வந்து, அமைதியாய் திண்ணையில் இருந்தேன். அப்படியே உறங்கலானேன். மறுநாள் இன்னொரு  கிரியை. கவலையுடனேயே நாட்கள் கரைந்தோட அந்தியேட்டியும் முடிந்தது. அதுவரை எமக்கு உதவியாய் இருந்த அம்மா வழி உறவுகள் மெல்ல மெல்ல விடைபெற தொடங்கினர். இப்போது வீட்டில் நான், அம்மா, என் தங்கைகள்,  அம்மாவின் ஒன்றுவிட்ட  வயதான ஒரு பாட்டி மற்றும் சுந்தரம் மாமா மட்டுமே  இருந்தோம். சுந்தரம் மாமா என் அப்பாவின் நீண்ட நாள் நண்பர். வெளியூரில் வேலை செய்கிறார். அவ்வப்போது அப்பாவை பார்க்க இங்கு வந்து செல்வார். எங்கள் மீது மிகவும் அன்பு கொண்ட ஒருவர். பல இக்கட்டான நிலைமைகளில் எங்களுக்கு பக்கபலமாய் நின்றவர் என பின்னாளில் அம்மா சொல்லி தெரிந்து கொண்டேன். தங்கைகள் உள்ளே உறங்கி கொண்டிருந்தார்கள். நாங்கள் நால்வரும் நடு விறாந்தையில் ஆளுக்கு ஒரு மூலையில். அப்போது தான் அம்மாவிடம் கேட்டேன். “ஏன் அம்மா அப்பாக்கு ஏற்கனவே நெஞ்சு வலி வந்த விஷயத்தை எங்களுக்கு சொல்லவே  இல்லை? ” அம்மா அமைதியாய் இருந்தார். அவன் எப்போதும் தன் கஷ்டங்கள் உங்களை பாதிக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். உங்களை பற்றியே அனுதினமும் யோசித்த அவன்,  தன்னை பற்றி அக்கறை கொள்ளவில்லை. அதனால் தான் எது பற்றியும் உன்னிடம் சொல்லவில்லை. ஏன் அந்த கடன் விஷயங்கள் கூட…. ” என சுந்தரம் மாமா சொல்ல, திடீரென அம்மா  “அண்ணா… வேண்டாம் ” என்று மாமாவை தடுத்தார். “சொல்லுங்க மாமா என்ன கடன்?  இனியும் ஏன் அம்மா மறைக்கிறீர்கள் ! சொல்லுங்க” என்றேன். சற்று நேரம் நிசப்தம். “அப்பன் பொறுப்ப மகன் தானே சொமக்கனும்.. கேக்கிறான்ல சொல்லுங்கோவன் ” என பாக்கு இடித்தபடி சொன்னாள் கிழவி. கொஞ்ச நேரம் கழித்து அம்மாவே சொன்னார்.  “உன் அப்பா ரொம்ப நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். ஆனால் அவருக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படி சதி செய்தாரோ தெரியாது. நாங்க இந்த ஊருக்கு புதுசா வந்த போது இங்க யாரையுமே எங்களுக்கு தெரியாது. அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டோம். அப்ப யாரும் அப்பாக்கு வேல தரவும் தயாரா இல்ல. அங்க இங்க ஒரு சில நல்லவர்களிடம் கைமாறாய் கடன் வாங்கி குடும்பம் போய் கொண்டிருந்திச்சு. பிறகு கொஞ்ச மாசம் கழிச்சு தான் நீயும் வயித்துல உண்டானாய். ஆஸ்பத்திரி செலவு அது இது எண்டு, ஒண்டு ரெண்டாச்சு ரெண்டு நாளாச்சு…  மாறி மாறி கடன். வாங்கின கடன திருப்பி கொடுக்க வேல வேணுமே. எங்க தேடியும் வேல கிடைக்கல. பிறகு ஒரு மாதிரி ஒரு முதலாளி தான் இந்த சைக்கிள் கடையில வேல குடுத்தாரு. இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடன அடச்சு வந்தாரு. ஆனா இதுல பெருசா வருமானம் இல்லையே… இப்ப எல்லாரயும் தனியா தவிக்க விட்டுட்டு போட்டாரு! “ என அம்மா அழுது அழுது கூறினார்.
“என்னம்மா சொல்றிங்க அப்போ இந்த கடை நம்ம கடை இல்லையா? “

“இங்க நமக்கு எதுவும் சொந்தமில்லப்பா… ஏன் இந்த வீடு கூட நம்மளது இல்லை.  இந்த வீடு கடை எல்லாம் அந்த முதலாளியோடது. அவர் வெளியூர்ல இருக்காரு. இந்த வீட்டையும் கடையையும் வாடகைக்கு தந்து எங்களுக்கு உதவினாரு”

அடுக்கடுக்காய் எனக்கு அதிர்ச்சிகள். அப்பாவை எண்ணி வருந்தினேன்.  எங்களை வளர்க்க குடும்பத்தை முன் நடத்த எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். “ம்ம்…  ம்ம்ம்… ” என்று பெருமூச்செறிந்தவாறு “சரி அம்மா… அப்பாக்கு ஏற்கனவே நெஞ்சு வலி எப்ப வந்திச்சு? “
                    என் ஒவ்வொரு கேள்விகளும் அப்பாவின் நினைவுகளை தூண்டுவதாய் இருந்தது. அது அம்மாவின் அழுகையில் இருந்தே தெரிந்தது. “ஒருக்கா கடன் குடுத்த ஒராள் கடன் கேட்டு வந்து வாசல்ல நின்னு கோபமா.. ரொம்ப தர குறைவா ஏசினாரு. அந்த அதிர்ச்சில நெஞ்ச பிடிச்சு கொண்டு அப்டியே மயங்கி விழுந்தாரு. அப்போ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக தான் அப்பாக்கு மாரடைப்பு இருக்கிற விஷயம் தெரிய வந்திச்சு. அதுக்கு வைத்தியம் பாக்க கூட அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போய் வந்தாரு. பிறகு பிறகு மருத்துவ செலவுகள் கூட கூட, நான் சொல்லியும் கேக்காம ஆஸ்பத்திரிக்கு போகாம மருந்த மட்டும் குடிச்சுக்கிட்டு இருந்தாரு”. அப்பாவை நினைக்கையில் ஒரு புறம் கவலையாய் இருந்தாலும் சற்று கோபமும் வந்தது. அப்பா கொஞ்சமாவது தன் நலனிலும் அக்கறை கொண்டிருந்திருக்க வேண்டும். “சரிம்மா… நானும் இங்க வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆவுது. ஊர்ல வேல எல்லாம் அப்பிடியே கிடக்கு. நான் நாளைக்கு ஊருக்கு போகலாமுன்னு இருக்கேம்மா.. ” என்றார் சுந்தரம் மாமா. “ஓம் அண்ணா நீங்களும் உங்கட வேலையல பாக்க தானே வேணும்” என்றார் அம்மா. அவரை தடுப்பதும் அழகல்ல. என்ன தான் அவர் உதவியாய் இருந்தாலும் இனி எங்கள் வாழ்வை நாங்கள் தான் பார்க்க வேண்டும். பொழுதும் புலர்ந்தது. மாமா அம்மாவிடம் கொஞ்ச பணத்தை கொடுத்து செலவுக்கு வைத்திருக்க சொல்லி விட்டு, அடிக்கடி எங்களை வந்து பார்ப்பதாக சொல்லி சென்றார். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அம்மா என்னையும் தங்கைகளையும் இனி பள்ளிக்கு செல்லும்படி கூறினார். நான் அம்மாவிடம் “இல்லையம்மா தங்கைகள் பள்ளிக்கு போகட்டும். நான் எங்காவது வேலைக்கு போறேன்” என்றேன்.  அம்மா என்னை ஏசினார். “நீ படிக்கோணும். வேல செய்ற அளவு வளந்திட்டியோ ! ” என்று கடுமையாக திட்டினார். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அம்மா கேட்பதாயில்லை. என் முடிவை மாற்றி கொண்டு பள்ளி செல்ல தொடங்கினேன். அம்மா தோட்ட வேலைக்கு சென்று அங்கு கிடைத்த சம்பளத்தை கொண்டு எங்களை வளர்த்தார்கள். எனக்கு ஏற்கனவே படிப்பில் ஆர்வமில்லை. இப்போது சுத்தமாய் இல்லை. எனினும் அம்மாவுக்காக பள்ளி சென்று வந்தேன். ஆனால் தங்கைகள் கெட்டிக்காரிகள். நன்றாய் படித்து வந்தார்கள். அம்மாவுக்கு தைக்கவும் தெரிந்தபடியால் தோட்ட வேலை தவிர்ந்த நேரங்களில் பிறருக்கு ஆடைகளையும் தைத்து கொடுத்தார். அதிலும் ஒரு சொற்ப வருவாய் கிடைத்தது. நானும் எப்படியாவது அம்மாவுக்கு உதவ வேண்டும் என எண்ணினேன்.

நான் மூத்த பிள்ளை வேறு. அம்மாவுக்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது. அப்பாவின் மறைவுக்கு பிறகு நான் மிதிவண்டி கடையை மறந்து விட்டேன். அந்த பக்கம் போவது கூட இல்லை. ஆனால் அம்மா அந்த முதலாளியிடம் கடையை  வேறு யாருக்கும் வாடகைக்கு விடுமாறு சொல்ல போவதாக பாட்டியுடன் பேசி கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அன்று ஒரு நாள் பள்ளி முடிந்ததும் வீடு வந்து மிதிவண்டி கடைக்கு போனேன். பல மாதம் திறக்கப்படாதபடியால் ஒரே தூசாக இருந்தது. கடைக்குள் நுழைந்தவுடனேயே அப்பாவின் நினைவுகள் தான் அலை மோதின. அப்பா கடையை ஒழுங்காக வைத்திருப்பார். காலை வந்தவுடனேயே சாமி படத்துக்கு பூவைத்து, ஊதுவர்த்தி கொளுத்தி… கடையே மங்களகரமாய் இருக்கும். மிதிவண்டி திருத்தும் கடையாய் இருந்த போதும் கூட சாவிகள், நட்டுகள், உதிரி பாகங்களை சிதற விடாது  நேர்த்தியாக ஒழுங்கமைத்து வைத்திருப்பார். இப்போது தான் எண்ணி பார்க்கிறேன். சொந்த கடையாய் இல்லாத போதும் கூட அப்பா தன் வேலை மீதும் இந்த கடை மீதும் கொண்ட பற்று அளப்பரியது. அப்பாவின் நினைவுகளை மீட்டு கொண்டே கடையை சுத்தம் செய்தேன். அப்பாவின் அருகே இருந்து கவனித்தவற்றை செயற்படுத்தி பார்க்க அங்கிருந்த ஒரு பழைய மிதிவண்டி ஒன்றை அதன் கோளாறை இனங்கண்டு எல்லாம் தெரிந்தவன் போல சரி செய்ய முயன்றேன். எனக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. காரணம் மனதுக்கு பிடித்த வேலை. மற்றும் எனக்கு மிகவும் பழக்கமான இடமும் கூட. எப்படியாவது அம்மாவிடம் கேட்டு இந்த கடையை மீண்டும் திறந்து இங்கு அப்பாவை போல் வேலை செய்ய வேண்டும். என பலவாறு எண்ணிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தேன். நேரம் ஓடவே அப்படியே வீடு வந்தேன். பள்ளி செல்லும் நேரம் தவிர மிகுதி நேரமெல்லாம் மிதிவண்டி கடையிலேயே செலவழித்தேன். அந்த ஒரு மிதிவண்டியை சரி செய்ய நான் முயன்றதற்கு மூல காரணம், அந்த மிதிவண்டியை சரி செய்து காட்டி எப்படியாவது கடையில் வேலை செய்ய அம்மாவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதுவே. அம்மாவும் அவர் சொற்படி பள்ளி சென்று வருவதால்  என்னை தடுக்கவில்லை. அம்மாவின் எண்ணம் நான் ஏதோ விளாயாட்டாய் செய்கிறேன் என்று. பல நாள் கஷ்ட்டப்பட்டு ஒரு நாள் என் வேலையை பூரணமாக்கி விட்டேன். சில்லுகள் அற்று பாகங்களாய் கிடந்தவற்றை ஒன்று சேர்த்து ஒரு துவிச்சக்கரவண்டியை தயார் செய்து விட்டேன். இனி அது ஓடுமா? என பரீட்சிக்க வேண்டும். எனக்கு மிதிவண்டி ஓட தெரியும். அப்பா தான் சொல்லி தந்தார். நான் தயார் செய்த வண்டியை வெளியே எடுத்துக்கொண்டு ஏறி இருந்து ஒரு மிதி மிதித்தேன். மெல்ல மெல்ல தொடர்ந்து ஓடினேன். எவ்வித சத்தமும் இன்றி வண்டி சீராய் சென்றது. அப்படியே வண்டியை வீட்டுக்கு விட்டேன். வாசலை அடைய முன்பே “அம்மா… அம்மா… ” என்று  சந்தோசத்தில் கூப்பிட்டவாறே சென்றேன். அம்மா வந்து வெளியே பார்த்தார். மலர்ந்த முகத்துடன் முற்றத்தை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன். “அம்மா பாத்திங்களா ! நானே தயார் செய்த மிதிவண்டி எப்பிடி இருக்கு?  ” அம்மாவின் முகம் மலர்ந்தது. “ரொம்ப நல்லா இருக்கு ! சரி சரி வா… கை கால் கழுவி போட்டு வந்து சாப்பிடு” என்றார். எனது திறமையை எண்ணி அம்மாவுக்கும் சந்தோசம் தான். எனது முதல் முயற்சியில் நான் வென்று விட்டேன். அப்படியே நாட்கள் நடந்தேறின.

ஒரு மாதிரி நானும் சாதாரண தரம் படித்து முடித்து சாதாரண சித்திகளோடு எல்லையில் சித்தியடைந்தேன். அம்மாவுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது. எனக்கு படிப்பும் ஓடாது. அம்மாவுக்காகவே பள்ளி சென்று படிப்பும் முடித்தேன். எங்கள் ஊரில் இது தான் உயர் தரம். இதற்கு மேல் படிப்பதென்றால் பட்டணம் தான் போக வேண்டும். அதுக்கு நிறைய செலவாகும். அதுபோக மேலே படிக்கும் எண்ணமும் எனக்கில்லை. அம்மாவிடம் போய் மிதிவண்டி கடையை மீள ஆரம்பித்து வேலை செய்ய போவதாக கூறினேன். அம்மா எதிர்ப்பார்கள் என்று தான் எண்ணினேன். அம்மா உன் இஷ்டம். என்று சொல்லி விட்டார்கள். எனக்கு ஆச்சரியாமாய் இருந்தாலும் கூட, அம்மாவின் அந்த பதிலுக்கான காரணம் எனக்கு தெரியும். இதற்கு மேல் என்னை படிக்க வற்புறுத்த முடியாது என்பது ஒன்று, மற்றது வெளியில் தெரியாத இடங்களில் சென்று வேலை பார்ப்பதை விட இது கொஞ்சம் பாதுகாப்பானது என்பதற்காகவும் தான். கடை முதலாளியிடம் கூறி விட்டு, உடனே ஒரு நல்ல நாள் பார்த்து கடையை மீள திறந்தோம். என்னதான் நான் கொஞ்சம் கொஞ்சமாய் வேலைகளை கற்றுக்கொண்டிருந்த போதிலும், கடையை தொடர்ந்து நடத்த சகல விடயங்களும் தெரிந்த ஒரு நபரும் தேவை. அதனால் முதலாளி இன்னொரு நபரையும் என்னோடு சேர்ந்து வேலை செய்ய அனுப்பி வைத்தார்.  கடை மெல்ல மெல்ல சீராய் இயங்க தொடங்கியது. என் ஆசைப்படி என் குடும்பம் இயங்க என்னாலான பங்களிப்பையும் செய்யக்கூடியதாய் இருந்தது. கடையில் கிடைக்கும் வருவாயில் குடும்ப செலவு மற்றும் கடன் செலுத்துதல் போக ஒரு குறிப்பிட்ட தொகையை மீதம் பிடித்து சேமிக்க தொடங்கினேன். இப்படியே மகிழ்வுடன் புதிய பாதையில் வருடங்கள் கழிந்தன. தங்கைகளும் தங்கள் கல்வியில் மேம்பட்டு வந்தார்கள். கடின உழைப்பின் பயனாய் முதலில் நாங்கள் வாடைகைக்கு இருந்த வீட்டை சொந்தமாய் ஆக்கி கொண்டோம். கடன்கள் யாவும் மெல்ல மெல்ல அடைத்து முடித்தும் விட்டோம். மூத்த தங்கை பருவமெய்தினாள். பிறகு இரண்டு வருடம் கழித்து கடைசி தங்கையும் பருவமெய்தினாள். இருவருக்கும் சேர்த்து ஒன்றாய் என் சக்திக்கு ஏற்ற வகையில் சடங்கு நிகழ்வு செய்து முடித்தேன். வருடங்கள் செல்ல செல்ல என்னுடைய  பக்குவ போக்கை என்னால் உணர முடிந்தது. “எண்ணங்கள் நன்றாயிருப்பின் முயற்சிகள் கை கூடும் ” என்பது போல அடுத்து ஒரு சில வருடங்களில் மிதிவண்டி கடையையும் சொந்தமாக்கி கொண்டோம். அப்பா பட்ட அவமானங்கள், துன்பங்கள் யாவும் நிவர்த்தியாகும் வண்ணம் ஊரில் எமக்கென்றொரு அந்தஸ்தை உயர்த்தி கொண்டோம். நான் துவிச்சக்கரவண்டியின் பாகங்கள் வாங்குவதற்காக பட்டணம் அடிக்கடி சென்று வருவேன். அப்போது அங்கு இருந்த ஒரு நண்பரின் உதவியுடன் எங்கள் கடையை பெருப்பித்து, துவிசக்கர வண்டியுடன், மோட்டார் வண்டி திருத்தமும் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தேன். கடை இன்னும் பெரிய அளவில் முன்னேற தொடங்கியது. என்னுடைய முயற்சிகளையும் துடிதுடிப்பையும் கண்டு அம்மா மகிழ்ந்தார்கள். தங்கைகளை மேற்படிப்பு படிக்க வைக்க ஆசைப்பட்டேன். அவர்கள் வெளியூர் சென்று மேற்படிப்பை தொடர்ந்தார்கள். அங்கு சுந்தரம் மாமா அவர்களுக்கு உறுதுணையாய் இருந்தார். “ஒரு பெண் படித்தால் ஒரு தலைமுறையே தழைத்தோங்கும் ”  என்பதை நான் நன்கு புரிந்திருந்தேன். அவர்களும் அண்ணனுக்கும் அம்மாவுக்கும் கட்டுப்பட்ட பிள்ளைகளாய் ஒழுக்கமுடன் வளர்ந்து வந்தார்கள். பட்டணத்திலும் ஒரு கடை போட்டால், நன்றாய் ஓடும் என்ற என் நண்பனின் கருத்தை ஏற்று அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அங்கு சகல மோட்டார்  வாகன பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாக விற்பனை என கடையை சூழலுக்கு ஏற்றாற்போல் விஸ்தரித்துக்கொண்டேன்.

காலம் போன போக்கில் தங்கள் படிப்புகளை முடித்து விட்டு,  முதல் தங்கை பிரதேச சபையில் வேலை செய்து கொண்டிருந்தாள். மற்ற தங்கை ஆசிரியராக பணி புரிய தொடங்கினாள். படிப்பு முடிய தொடங்கவே,  அம்மா தங்கைகளின் கல்யாண பேச்சை தொடங்கி விட்டார். நல்லா இடங்களில் இருந்து சம்பந்தங்கள் கை கூடி வரவே இரண்டு தங்கைகளுக்கு இனிதே திருமணமும் நடந்தேறியது. அப்பா நேற்று தான் இறந்தது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இப்போது நான் பட்டணத்தில் வேறு சில வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். நான் என்ன தொழில் செய்தாலும் அது எல்லாவற்றுக்கும் எனக்கு அடிப்படையாய் இருந்தது. என் அப்பாவின் மிதிவண்டி கடை தான். அதில் நான் பெற்ற அனுபவம், வருமானம் எல்லாம் தான் என்னை வாழ்வின் அடுத்தடுத்த படிகளுக்கு கொண்டு போய் சேர்த்தது. அப்பா பட்ட கடன்களை அடைக்க முடிந்தது,  சொந்தமில்லாத வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடிந்தது , கடையை சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது, தங்கைகளை படிக்க வைத்து நல்ல இடத்தில் கரை சேர்க்க முடிந்தது என இப்படி என் கனவுகள் யாவும் மெய்ப்பட வைத்தது அந்த மிதிவண்டி கடை.  அதனால் தான் அந்த கடையை பலர் கேட்டும் கொடுக்காமல் வேலைக்கு ஆள் அமர்த்தி நடத்தி வருகிறேன். என்னுடைய கனவுகள் இன்னும் நீண்டு கொண்டிருக்கின்றன. அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்…

     “கனவுகள் மெய்ப்பட வேண்டும் “

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் “

Written By:-

 

 

 

 

Kanagapunitharajah Srikarshan
University of Jaffna

Spread the love
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Miththu K Rajah

Excellent Story! Keep Writing…❤