தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள். இந்நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர். நமக்கு உணவளிக்கும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், உழவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்.தைப்பொங்கல் திருவிழா உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியவே தங்கள் நாட்காட்டியாக கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும்போது சூரியனின் ஆறு மாத நீண்ட பயணத்தின் தொடக்கத்தை இந்த பொங்கல் திருவிழா குறிக்கிறது. பொங்கல் பண்டிகையை தை பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தை திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.பொங்கல் தினத்தன்று புது பானை வாங்கி, புது பச்சரிசியில் பொங்கல் வைப்பர். பொங்கல் பானை பொங்கி வழிவது போல இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழியவேண்டும் என்று இறைவனை வேண்டுவர்.கோலத்திற்கு நடுவில் அடுப்பு கூட்டி புதுப்பானை வைத்து, அதனை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டி, அதில் சர்க்கரை பொங்கல் வைப்பர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதன் பிறகு படையல் போடுவதற்கு வாழை இலை விரித்து அதன் மேல் மண் விளக்கேற்றி, சாணத்தில் பிள்ளையார் செய்து வைத்து, புது தானியங்கள், புது காய்கறிகள், மற்றும் கரும்பு வைத்து பூஜை செய்வர். பூஜை முடிந்ததும் உறவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்பர்.தைப் பொங்கல் கலாச்சார மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி, தமிழ் சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்குகிறது. இது விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல் நன்றியுணர்வு, பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளையும் ஊக்குவிக்கிறது. தைத்திருநாள், மக்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது,மக்களிடையே பாரம்பரிய உணர்வை வளர்க்கிறது. தைப் பொங்கல் சமூகத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது, மேலும் வாழ்க்கை, செழிப்பு மற்றும் நன்றியுணர்வின் கொண்டாட்டத்தில் தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் பழமையான மரபுகளையும் கலாசாரத்தையும் எதிரொலிக்கின்றது.
Written By: –
Rtr. Balakrishnan Sugashani
(Junior Blog Team Member 2023-24)
Edited By: –
Rtr. Nitharshanan Sivabalasundaram
(Blog Team Member 2023-24)