அரிவையென்றால் அறிவை மற
தெரிவைப் பெண்ணே தீண்டாதே
மங்கை நீயும் மனையில் கிட
மடந்தை யென்றால் மடிந்து நட
பெதும்பை ஆயின் உரிமை மற
பேரிளம் பெண் ஆனாலும்
நிம்மதி இல்லை அவள் வாழ்வில்
ஏழு பருவப் பெண்டிருக்கும்
ஏட்டில் எழுதா விதியாக
வழங்கி வந்த வரங்கள் இவை
வரலாறு நெடுகிலும் வஞ்சியரை
வஞ்சித்து வந்தனர் வழி வழியாய்
கன்னியின் கருவினில் உதித்து
மங்கையின் மடியில் மிதந்து
அவளின் கையாலே உண்டுடுத்து
அவளையே தாழ்த்தி வைக்கும் ஆணினம்.
உண்மையில் தாழ்ந்தவள் பெண்ணில்லை
பெண் சுதந்திரத்தைச் சுட்டெரிக்கும் ஆணினமே
பெண்ணென்றால் இங்கோர் தனி நீதி
ஆணாயின் ஆதிக்கம் செயும் நீதி
யாருக்கு வேண்டும் இந்நீதி
பாலித்திடுவோம் புது நீதி
பெண்ணுரிமையை வெல்லவும்
பெண்டிரைக் காக்கவும்
பேர்கலாத் துயர் பெற்ற ஆடவரும்-உள்ளனர்
பாரிற் பலரும்-அவ்வாறே
பாரதியும் கண்டார்
புதுமைப் பெண்ணினை
பெண்ணே நீயும் துள்ளியெழு
புதுமைப் பெண்ணாய் மாறிவிடு
பாவையர் கனவை நோக்கி நடை போடு
புது மாதர் அறங்கள் படைத்திட
பொறுத்தது போதும் பொங்கியெழு…
Written by :
Fathima Sahna
(Top 20 nominee)
Wordsville 2.0